நாம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் ஸ்பீக்கர், ரூமுக்குள் நுழைந்ததும் எரியும் மின்விளக்கு, ஓட தொடங்கும் ஃபேன்கள் போன்றவற்றுடன் வீடுகளை உருவாக்க வேண்டும் என்பது இக்காலத்து இளைஞர்கள் பெரும்பாலோரின் விருப்பம்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை இதுபோன்ற கருவிகள் வெறும் ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே பார்க்கும் நிலை இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற IOT கருவிகளுக்கு என்று இந்தியாவில் தனியொரு சந்தை உருவாகிவிட்டது.
IOT என்றால் Internet of Things. அதாவது மின்விளக்கு, ஃபேன்கள் போன்ற கருவிகள் சென்சார்களை கொண்டு இணையதளம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இவை தானாக இயங்கும் அல்லது ஸ்மார்ட்போனை கொண்டு அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
இந்தியாவில் IOT சந்தையை கைப்பற்ற பல்வேறு நிறுவனங்களுக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் பல அட்டகாசமான கருவிகளையும் இந்த நிறுவனங்கள் வெளியிடுகின்றன. அதன்படி 2020ஆம் ஆண்டு வெளியான டாப் 5 IOT கருவிகள்.
ஆப்பிள் ஹோம்பாட் மினி (Apple HomePod Mini)
ஸ்மார்ட் சாதனங்கள் பட்டியலில் ஆப்பிள் இடம்பெறாமல் போனால் எப்படி? உலகிற்கு ஸ்மார்ட்போன்களையே முதலில் அறிமுகப்படுத்தியது அவர்கள் ஆயிற்றே! இந்தாண்டு IOT பிரிவில் ஆப்பிள் S5 சிப்புடன் ஆப்பிள் ஹோம்பாட் மினி என்ற ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் புதிதாக இண்டர்காம் என்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வீட்டில் இருக்கும் பல அறைகளிலும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இருக்கிறது என்றால், அப்போது ஒரு குறிப்பிட்ட அறையில் இருக்கும் நபருக்கு மட்டுமே ஒரு செய்தியை அனுப்ப முடியும். இதுதவிர வழக்கமான ஸ்மார்ட் ஸ்பீக்கரில் இருப்பதைப்போல பாடல்களை கேட்கும் வசதி, விளையாட்டுகள் உள்ளிட்ட பல வசதிகளையும் இந்த ஆப்பிள் ஹோம்பாட் மினி பெற்றுள்ளது.
வெள்ளை மற்றும் க்ரே நிறங்களில் வெளிவரும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர், இந்தியாவில் ரூ. 9,990 விற்பனையாகிறது.
ரியல்மி ஸ்மார்ட்கேம்
அனைவரும் வேலைக்கு செல்லும் இந்தக் காலத்தில் வீடுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது சவால் மிகுந்த ஒன்றாகிவிட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல நிறுவனங்களும் வீட்டை கண்காணிக்க உதவும் ஸ்மார்ட் கேமராக்களை வெளியிட்டுவருகிறது.
ஒரு கண்காணிப்பு கேமராவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தாண்டு ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் கேம் 360 டிகிரி
ஒரு சிறந்த சாயிஸாக உள்ளது. இந்த கேமரா AI மோஷன் சென்சாருடன் வெளியாகியுள்ளது. இதனால் வீட்டில் திடீரென்று ஏதாவது இயக்கத்தை உணர்ந்தால் வீட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கும்.