தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

பண்டைய கடலின் முதல் நிலை வேட்டை அரசன் மெகாலோடன் - உலகின் மிகப்பெரிய சுறா

சுமார் 23 முதல் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலை ஆட்சி செய்த முதல் நிலை வேட்டை விலங்கான கார்சரோக்கிள்ஸ் மெகாலோடன் பெருங்கடல்களின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்தது. 21ஆம் நூற்றாண்டின் வெள்ளை சுறாவை(Great white shark) விட மூன்று மடங்கு நீளம் கொண்ட மெகாலோடன் சகாப்தம் முடிந்தும்கூட, இதன் மர்மம் இன்னும் தொடர்கிறது.

megalodon
megalodon

By

Published : Sep 24, 2021, 10:37 PM IST

கார்சரோக்கிள்ஸ் மெகாலோடன்(Carcharocles megalodon) அல்லது உள்ளூர் வழக்கு மொழியில் 'பெரும்பல்லன்'. இந்த புராதன மெகாலோடன் பூமியில் இதுவரை வாழ்ந்த வேட்டை விலங்குகளில் மிகப்பெரியது. ஹோமோ சேப்பியன்களின் வருகைக்கு முன்பே அழிந்துபோன கார்சரோக்கிள்ஸ் மெகாலோடனின் சரித்திர கதைகள் நமக்கு பெரும் வியப்பை அளிக்கும்படி இருக்கிறது. முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் கையின் அளவை கொண்ட பல நூறு பற்களுடன், பண்டைய கடல்களில் சுற்றித்திரிந்த மெகாலோடன் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரிய திமிங்கிலங்களைக் கூட இரண்டு துண்டுகளாகக் கிழித்துவிடக்கூடியது.

நவீனக் காலத்தில் நன்கு அறியப்பட்ட கார்சரோக்கிள்ஸ் மெகாலோடன், வெறுமனே மெகாலோடன் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த சுருக்கப்பட்ட பெயர், க்ளாம் இனத்தின் பெயராகும். ஆராய்ச்சிகளின்படி கார்சரோக்கிள்ஸ் மெகாலோடன் என்பதே பெரும்பல்லனின் பொருத்தமான பெயராகும்.

மெகாலோடன் தாடை

ஒரு சரித்திர விலங்கின் தொடக்கம்

420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சுறாக்கள் தோன்றிவிட்டன. இது மீன் இனங்கள் வளரத் தொடங்கின காலம். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பாலான உயிரினங்களுக்கு முதுகெலும்புகள் இருக்கவில்லை. பெருங்கடல் தேள்கள், குதிரைவாலி நண்டுகள், ஆக்டோபஸ்கள் மட்டுமே வேட்டையாடிகளின் பட்டியலில் இருந்தன. கார்போனிஃபெரோஸ் மற்றும் பெர்மியன்(Carboniferous and Permian) காலகட்டத்தில்தான் அனைத்து வகையான சுறாக்களும் வேட்டையாடும் வகையில் உருமாற்றம் பெற்றன.

இதில் கார்சரோக்கிள்ஸ் மெகாலோடன் பரம்பரை சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. தோன்றிய சில மில்லியன் ஆண்டுகளில் மெகாலோடன் முதல்நிலை வேட்டையாடி விலங்காக பரிணாமம் அடைந்தது. 20 அடிக்கும் மேல் பிளக்கக்கூடிய தனது தாடைகளை வைத்து திமிங்கலங்கள், கடல் பசுக்கள், கடல் ஆமைகள் பிற பாலூட்டிகளை வேட்டையாடி உண்டு வந்ததது. மெகாலோடன் சுறா, தற்போதைய வெள்ளை சுறாவின் மூதாதையர் என்று நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிவந்தனர்.

மெகாலோடன் அளவீடு

ஆனால், இரண்டு இனங்களும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்திருப்பது அண்மைகால ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. கடலின் பெரும்பாலான பகுதிகளில் மெகாலோடன் ஆதிக்கம் நீண்டிருக்கிறது. குறிப்பாக டென்மார்க், தெற்கு நியூசிலாந்து கடல் பகுதிகளில் மெகாலோடனின் தலைநகரங்களாக இருந்தற்கான சான்றுகள் உள்ளன.

உடற்கூறியல், இனப்பெருக்கம்

மெகாலோடன் மற்ற சுறாக்களைப் போலவே, தண்ணீரைக் கிழித்து வேகமாக நீந்தக்கூடிய உடல் தகவமைப்பைப் பெற்றிருந்தது. இதன் எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை குருத்தெலும்புகளாக இருந்தன. இதனை எலாஸ்மோ பிரான்சிஸ்(Elasmobranchs) என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குருத்தெலும்புகள் எலும்பை விட மிகவும் இலகுவாக, வலிமையாக இருப்பதால் மெகாலோடன்களால் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி நீண்ட தூரம் நீந்தவும், வேட்டையாடவும் முடிந்தது.

ஆனால், குருத்தெலும்புகள் புதைபடிமமாக மாறாது. மெகாலோடன்களைப் பற்றிய கதைகள் அனைத்தும் அவற்றின் பற்கள், முதுகெலும்புகள் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளே. 21ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சிகளில் பல, மெகாலோடனுக்கும் மகோ(Mako) சுறாக்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றன.

வெள்ளை சுறா மற்றும் மெகாலோடன் பற்கள்

ஆனால், மகோ சுறாக்களைவிட மெகாலோடன் அளவில் பெரியவை. மெகாலோடன் பற்கள் 7 அங்குலங்கள் (18 செ.மீ.) இருந்திருக்கின்றன. இந்தப் பற்கள் தொடர்ந்து உதிர்த்தும், வளர்ந்தும் வரக்கூடியவை. ஒரு மெகாலோடன் தனது வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான பற்களை இழந்தும் பெற்றும் வாழ்ந்துள்ளது.

மெகாலோடன் சுமார் 60 அடி நீளம் வரை வளரக்கூடியது. இது இரண்டு ரயில் பெட்டிகளின் நீளத்தைவிட அதிகம். இதன் எடை சுமார் 50 டன்கள் வரை எட்டும். பெண் மெகாலோடன்கள் சராசரியாக 44 முதல் 56 அடி நீளம் வரை வளரும். இந்த அளவீடுகளும் குருத்தெலும்பு படிவங்கள் கிடைக்கப்பெறாத, மதிப்பீடுகளே. மீன்களின் இனப்பெருக்க சுழற்சியைப் போலவே மெகாலோடன்களும் பாதுகாப்பான விரிகுடாக்களிலும், கழிமுகங்களிலும் தங்களது இனப்பெருக்கத்தைச் செய்துள்ளன.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அமெரிக்க கண்டத்தின் பனாமா, மேரிலாந்து, மேற்கே உள்ள கேனரி தீவுகள், புளோரிடா கடல்பகுதிகள் மெகாலோடன்களின் இனப்பெருக்கம் தளமாக இருந்துள்ளது. மெகாலோடன் குட்டிகள் பெரும்பாலும் விரிகுடாக்களில் சுற்றித்திரிந்தன. நன்கு வளர்ந்த மெகாலோடன்கள் ஆழ்கடலில் வசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

கால மாற்றமும் மெகாலோடன் முடிவும்

கடலில் உள்ள பெரிய பாலூட்டிகள் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்தன. அதாவது செனோசோயிக் சகாப்தம்(குளிர்ந்த காலம்) தொடங்கிய காலகட்டம். மெகாலோடனின் முக்கிய உணவான திமிங்கலங்கள் உள்ளிட்ட பாலூட்டிகள் கடல் குளிருக்கு ஏற்ப பரிணாமம் அடைந்தன. அந்த காலகட்டத்தில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் படுகைகளுக்கு இடையில் உயிரினங்கள் சென்றுவர பாதை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பாதையின் மூலம் பாலூட்டிகள் ஊட்டச்சத்து மிகுந்த அட்லாண்டிக் கடலைச் சேர்ந்து பன்முகத்தன்மையை தக்கவைத்துக்கொண்டன. மெகாலோடன்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியது. மெகாலோடனின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் அனைத்தும் பனிப்பாறைகளாக மாறின.

சில மெகாலோடன்கன் கரீபியன் மற்றும் அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடலுக்கு தஞ்சம் அடைந்தும் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இந்த காரணங்களால் மாபெரும் மெகாலோடனின் பாரம்பாரிய உடல் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு பிந்தைய காலங்களில் மெகாலோடனின் புதைப்படிவங்கள் கிடைக்கவில்லை. மெகாலோடன் அழிவிற்கு சரியான காரணமும் புலப்படவில்லை. வெகுசில ஆராய்ச்சியாளர்கள் இன்றும் ஆழ்கடலில் மெகாலோடன் வாழ்ந்துவருவதாக கூறுகின்றனர். மெகாலோடன் சாகாப்தம் முடிந்தும்கூட இதன் மர்மம் தொடர்கிறது.

இதையும் படிங்க:மங்களூரு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா..!

ABOUT THE AUTHOR

...view details