ஒன் பிளஸ் போன்களின் அடுத்த படைப்பான ஒன் பிளஸ் 7 வரிசையில் வெளியாகவுள்ள ஒன் பிளஸ் 7, ஒன் பிளஸ் 7 ப்ரோ ஆகிய போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் கிராக்கி நிலவி வருகிறது.
வரும் மே 14ஆம் தேதி இந்த மொபைல் போன்களை அந்நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த விழாவை நடத்த உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை அன்றைய தினம் 8.15 மணிக்கு பெங்களூருவில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்த போன் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், அது தொடர்பான பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஒன் பிளஸ் 7 ப்ரோ போனை பொறுத்தவரை அது ஒரு ஃபுல் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டதாக அமைந்திருக்கும் என்பதால் அதன் கேமரா ஒரு பாப்-அப் கேமராவாக அமைந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த போன்கள் சில குறிப்பிட்ட நாடுகளில் தாமதமாக வெளியாகலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். இதன் பின்புறம் மூன்று கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அதன் மெகா பிக்சல்கள் குறித்த விவரத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் விலை குறித்தும் பல்வேறு யூகங்கள் பரவிவரும் நிலையில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கு முந்தைய மாடலான ஒன் பிளஸ் 6 T ஆரம்ப விலையாக ரூ. 37,999-க்கு வெளியான நிலையில், தற்போது வெளியாகவுள்ள இந்த மொபைல் அதைவிட சற்று அதிகமான விலைக்கே விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
ஃபோன் பிரியர்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ள இந்தத் தகவல்கள் மே 14ஆம் தேதி உறுதிபட தெரிந்துவிடும் என்பதால் அனைவரும் காத்திருக்கின்றனர். அவர்களோடு நாமும் காத்திருப்போம்.