கொரிய நிறுவனமான சாம்சங், அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை, தனது பயனர்களுக்கு அளித்துவருகிறது. அதில் மிக முக்கியமானதாக கைரேகை ஒளிவருடி, முகம் மூலம் உள்நுழைதல் (Face unlock) தொழில்நுட்பம் ஆகியவை திறன்பேசி பயனர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துவந்தது.
இதெல்லாம் பாதுகாப்பின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்பட்டு இருந்த சமயத்தில், இதனை எளிதில் உடைத்துவிடலாம் என்று நிரூபித்துக் காட்டியிருந்தார் ஹேக்கர் டார்க் ஷார்க் (Dark Shark). அப்போது இணையர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருந்தது இந்த விவகாரம். அதிகமானோரைக் கவர்ந்திழுக்கும் எந்த ஒரு தொழில்நுட்பமும் ஹேக்கர்களால் உடைக்கப்படுவது ஒன்றும் புதிய தகவலாக வல்லுநர்களுக்குத் தெரியவில்லை.
அடுத்தகட்டமாக இதனினும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை சாம்சங் நிறுவனம் உருவாக்கியது. அதுதான் கண் கருவிழியில் ஒளியைச் செலுத்தி கைப்பேசியைத் திறக்கும் பாதுகாப்பு அம்சம்(IRIS Scanner) மற்றும் அல்ட்ரா சோனிக் கைரேகை ஒளிவருடி (UltraSonic Fingerprint Scanner) என இரு புதிய செறிவூட்டப்பட்ட தொழில்நுட்பத்தைத் தனது பயனர்களுக்காக, தனது புதிய வெளியீடான எஸ்10 ரக கைப்பேசிகளில் உள்ளடக்கி வெளியிட்டது. இதற்கு அவர்களின் தனித்துவமான இயங்குபாதையும், செயற்கை நுண்ணறிவு தன்மை கொண்ட ஏஐ எக்ஸினோஸ் செயலாக்கி (AI EXYNOS Processor) ஆதரவாக இருந்தது.
ஆனால், இம்முறையும் இப்பாதுகாப்பு அம்சம் ஹேக்கர்களால் தகர்க்கப்படும் என்று சாம்சங் சற்றும் எதிர்பார்த்திருக்காது. ஹேக்கர் என்று அறியப்படும் டார்க் ஷார்க் சாம்சங்கின் இந்த நம்பிக்கையை 13 நிமிடங்களில் உடைத்திருக்கிறார். ஒரு கிளாஸில் தன் கைரேகையைப் பதித்து, அதைப் புகைப்பட திருத்தும் மென்பொருளில் நகலெடுத்து, 3டி நகல் மூலம் தன் கைரேகையின் போலியை உருவாக்கிக் கொண்டார். அதைக் கொண்டு தன் சாங்சங் கேலக்ஸி எஸ் 10 திறன்பேசியை அன்லாக் செய்ய முயன்றபோது எந்தப் பிரச்னையும் தராமல் திறந்துகொண்டது.