தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

இணையவழிக் கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு தொலைதூர கனவாகவே உள்ளது! - இணைய வழிக் கல்வி

பிகார் மாநில கிராமப்புற மாணவர்களுக்கு, இணையவழிக் கல்வி என்பது ஒரு ஆடம்பரக் கல்வி முறையாகவே இருந்துவருகிறது. மாநிலத்தில் கல்வியறிவு 51 விழுக்காடாக இருக்கும் நிலையில், பூர்னியா மாவட்டம் மிக மோசமான நிலையில் உள்ளது. இம்மாவட்டத்தில் 30 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை; இதில் இணையவழிக் கல்வியை உட்புகுத்தினால் நிலை மாறுமா என்ற கேள்வி எழுகிறது.

இணையவழிக் கல்வி சாத்தியமா
இணையவழிக் கல்வி சாத்தியமா

By

Published : Jul 26, 2020, 7:48 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

பாட்னா: கரோனா தாக்கத்தினால் நாடு முழுவதும் இணையவழிக் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வேளையில், மாநிலத்தின் கிராமப் புறங்களிலும் இக்கல்வி முறையை பிகார் அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு இன்னும் அது எட்டாக் கனியாகவே இருந்துவருகிறது.

பிகார் மாநிலத்தில் கல்வியறிவு 51 விழுக்காடாக இருக்கும் நிலையில், பூர்னியா மாவட்டம் மிக மோசமான நிலையில் உள்ளது. நகரப் பகுதி மாணவர்கள் இணையவழிக் கல்வியை எந்தச் சிரமமும் இல்லாமல் கற்றுவரும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் பல இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். ஆம், மின்சார வசதி இல்லாதது, இணைய வசதி இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகள் அவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கின்றன.

ஆன்லைன் கல்வியா? ஸ்மார்ட்போன், டிவியில்லாத நாங்கள் என்ன செய்வது? பழங்குடியின மாணவர்கள்!

சில இடங்களில் கைபேசி அழைப்புகள் மூலம் மறுபுறம் பேசுபவர்களிடம் தெளிவாகப் பேசுவதே சவாலான காரியமாக உள்ளது. இதற்கிடையில் காணொலிக் காட்சி மூலம் பாடத் திட்டங்களைக் கற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம் என்று கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பிகார் அரசு கல்வியை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்துவருகிறது. ஆனால், உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது. ஆம், தரவுகளின்படி, பூர்னியா மாவட்டத்தில் 30 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை; இதில் இணையவழிக் கல்வியை உட்புகுத்தினால் நிலை மாறுமா என்ற கேள்வி எழுகிறது.

“எங்கள் குழந்தைகளுக்கு கல்வியைப் புகட்டும் சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போகிறது. நாங்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் இல்லை. இங்கு பல பேரிடம் ஸ்மார்ட்போன் கிடையாது. இணையமும் கிடையாது. அப்படி கிடைக்கும் பட்சத்தில், அதனைப் பெறுவதற்கான பொருளாதாரச் சூழலும் எங்களிடம் இல்லை” எனக் குமுறுகிறார் மாணவரின் பெற்றோர் ஒருவர்.

ஆன்லைன் கல்வியால் தீங்கு அதிகம் - கதறும் பெற்றோர்கள்!

அலுவலர்களிடம் தன் குழந்தைக்கு உதவி கேட்டு நிற்கும் தினக்கூலியான ராகுல், ”கரோனா காலத்தில் வாழ்வதே பெரும் சவாலாக உள்ளது. அரசு எங்களைப் போன்ற ஏழைகளையும் கவனிக்க வேண்டும். நாங்கள் எவ்வித உதவியுமின்றி தவித்து வருகிறோம்” என்று கனத்த குரலில் கூறினார்.

அரசின் தரவுகளை எல்லாம் தவிடுபொடியாக்குகிறது களநிலவரம். இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் புதுல் குமாரி, “இங்கு நிறைய பேரிடம் கைபேசி இல்லை. ஒரு கடைக்காரரிடம் இருந்து இரவலாக வாங்கிய கைபேசியைக் கொண்டு, மாணவர்கள் இணையவழியில் பாடம் கற்க உதவிவருகிறேன். இங்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்கள்தான் அதிகம் உள்ளன. அந்தப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இணையவழிக் கல்வி பயில வசதி ஏற்படுத்த முடியாமல் தவித்துவருகின்றனர்” என்றார்.

கிராமத்திலுள்ள ஒரு கடைக்காரர், ”மக்கள் சிலர் பழுதுபார்க்கும் கடைகளுக்கு வருகிறார்கள். ஒப்பீட்டளவில் மலிவான அல்லது பழைய கைபேசிகள் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், பெற்றோர்கள் பலர் குழந்தைகளுக்கான கல்வியைக் கொடுக்க முடியாமல், அவர்களுக்கான கல்வியைப் புறக்கணிக்கும் முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்" என்று கூறினார்.

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details