இன்றைய நவீன யுகத்தில், பல இளைஞர்கள் போதைப் பொருள்களை உபயோகிப்பது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவது, மோட்டார் பைக் ரேசிங்கில் ஈடுபடுவது உள்ளிட்ட பல தவறான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும்போக்கு அதிகரித்துள்ளது.
தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கண்காணிக்க வேண்டிய பெற்றோரே அவர்கள் கேட்கும் அனைத்தையும் நொடியில் வாங்கிக் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.
சில நாள்களுக்கு முன் இளைஞர்கள் ஓட்டிச் சென்ற கார் ஒன்று மேம்பாலத்திலிருந்து பறந்துசென்று விழுந்ததில் உயிரிழந்தனர். அதன் பிந்தைய அவர்களது விசாரணையில் அவர்களது காரிலிருந்து போதை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து நெரிசலின் இடையே அடிக்கடி மேற்கொள்ளும் ரேசிங் மூலம் நொடிப்பொழுதில் உயிர்கள் பறிபோகும் நிலையும் நிலவுகிறது. இவ்வாறு சமீப காலத்தில் அதிகரித்துவரும் குற்றங்கள் நடுத்தர மற்றும் வரிய குடும்பங்களைப் பெரும்பாலும் பாதிக்கின்றன.
இதுபோன்று நடக்கும் பல குற்றச் சம்பவங்களில் 40 விழுக்காடு குற்றங்கள் 18 முதல் 25 வரையிலான இளைஞர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.
குழந்தைப்பருவச் சூழல், பெற்றோரின் தாக்கம், குடும்ப உறவுகள், நட்பு உறவுகள் என அனைத்தும் ஒரு நபரின் வாழ்வின் போக்கை நிர்ணயிக்கும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
புத்தகங்களைப் படிப்பதற்கோ அல்லது விளையாடுவதற்கோ பதிலாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் கையில் இருக்கும் திரைகளில் மூழ்குகின்றனர். சிறு வயதிலேயே குழந்தைகளின் போக்குகளை அடையாளம் கண்டு சரியான திசையில் அவர்களை வழிநடத்துவது அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றும்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் அலட்சியம், இளமைப் பருவத்தில் மோசமான மேற்பார்வை ஆகியவை இளைஞர்களைத் தவறான வழியிலேயே இட்டுச் செல்லும். ஆடம்பரமான வாழ்க்கையின் தேடலில் மக்கள் கொள்ளை, திருட்டுக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தின் போக்கை நிர்ணயிப்பதில் திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் சமமான பங்கு வகிக்கின்றன. அனைத்து உயிரினங்களிலும் மனித சமுதாயமே எதிர்மறைத் தாக்கங்களை உடனடியாக ஏற்றுக்கொள்வதில் சிறந்தவர்களாக உள்ளது.
எனவே பெற்றோர்கள் ஆபத்தான நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்து தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி விவாதிக்க வேண்டும். பெற்றோரின் பலவீனங்களைக் கண்டறிவதில் குழந்தைகள் என்றுமே திறமையானவர்கள். குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சரியான பாதையில் கொண்டுசெல்ல ஒரு விரிவான திட்டத்தை முடிவுசெய்ய வேண்டும்.
ஆசிரியர்களின் பங்கும் இதில் முக்கியமானது. அனைத்து நாடுகளின் ஸ்தாபகத் தூண்களாகவும் இளைஞர்கள் உள்ளனர். வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அரசாங்கங்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. நகர்ப்புற, கிராமப்புற இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்பதைத் தலைவர்கள் உணர வேண்டும்.
இளைஞர்களே ஒரு தேசத்தின் எதிர்காலம், பெற்றோர், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் இணைந்து அவர்களைச் செப்பனிடுவதன் மூலமே ஆரோக்கியமானதொரு சமூகத்தை நாம் கட்டமைக்க முடியும்.