1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்தது. அதன்பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு 70% குறைந்துள்ளது. அதேபோல் கோவிட் - 19 தொற்று பரவத் தொடங்கிய பின்னான ஆறு மாதங்களை கணக்கில் கொண்டால், இந்திய ரூபாயின் மதிப்பு 4% குறைந்து, ஒரு அமெரிக்க டாலர் 75 ரூபாயில் வந்து நிற்கிறது.
எளிய மக்கள் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை பெரிதாக கண்டுகொள்வதில்லை. அவர்கள் அதை அரசாங்கத்தின் பிரச்னையாகவும், இந்திய ரிசர்வ் வங்கி அல்லது கார்ப்பரேட்டுகளின் பிரச்னையாகவும் கருதுகின்றனர். ஆனால், அது அம்மக்களின் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். இதுகுறித்து விரிவாக காண்போம்,
வெளிநாட்டில் கல்வி:
இந்திய பெற்றோர்களில் பலர் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் உள்ள நல்ல பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்க திட்டமிட்டிருப்பார்கள். இதற்காக அவர்கள் சிறுக சிறுக பணத்தை சேமித்திருப்பார்கள். ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கனவு கலைந்துபோனது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்தாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக நீங்கள் திட்டமிட்டு வைத்திருந்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக பணம் செலுத்த நேரிடும்.
உதாரணமாக, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 2010ஆம் ஆண்டு 1,000 டாலர்கள் கல்விக் கட்டணம் என்றால், ஒரு மாணவனின் பெற்றோர் அப்போது 45,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், தற்போதைய கணக்குப்படி அவர்கள் 75,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
கல்வி மட்டுமல்லாது மாணவரின் விடுதி கட்டணம், உணவு மற்றும் பிற செலவுகளையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இது அவர்களை பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாக்குகிறது.
வெளிநாட்டு பயணம்:
போக்குவரத்து நிறுவனங்கள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும், சர்வதேச விமான சேவை தொடங்கிவிட்டால் போக்குவரத்து நிலை மாறிவிடும். பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை நாட்களை வெளிநாடுகளில் கழிக்க நினைப்பவர்கள், தங்கள் பயணச் செலவுகளை மனதில் வைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி அவர்கள் பயணச் செலவுகளை அதிகரிக்கிறது. பயணக் கட்டணம், தங்குமிட கட்டணம் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.