தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

மறைக்கப்பட்ட நவீன இந்தியாவின் சாணக்கியர் பி.வி. நரசிம்ம ராவ் - நரசிம்ம ராவ் புகழஞ்சலி

நவீன இந்தியாவின் சாணக்கியர் என்றழைக்கப்படும் பி வி நரசிம்ம ராவ்வின் நூற்றாண்டு இன்று (ஜூன் 28) கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்திய பொருளாதாரம், அரசியலமைப்பு உள்ளிட்டவற்றில் அவரது பங்களிப்பு குறித்து முன்னாள் மத்திய உள்துறை செயலர் கே. பத்மநாபையா நமது ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்...

Narasimha Rao
Narasimha Rao

By

Published : Jun 28, 2020, 5:57 PM IST

இந்தியாவின் நவீன சாணக்கியர் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமரான பி வி நரசிம்ம ராவ்வின் நூற்றாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டுப் பணியில் தேசத்தைக் கட்டி எழுப்பியதிலும், கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவதிலும், நிர்வாகத் திறமையிலும் அறிஞரான அவருக்கு இருந்த மதி நுட்பம், அவரை சாணக்கியர் என பலரும் அழைக்க காரணமாயிற்று.

ஒரு சிறுபான்மை அரசை, முழுமையாக ஐந்து வருடங்கள் வெற்றிகரமாக நடத்தியது அவருடைய அரசியல் திறமைக்கும் சாதூரியத்திற்கும் சிறந்த சான்றாகும். ஒரு சிறுபான்மை அரசின் பிரதமராக ஐந்து வருடம் தொடர்ந்ததே ஒரு சாதனைதான். இதனால், மக்களும் அவரை சாணக்கியர் என்றே அழைக்கலாயினர். சீர்திருத்தவாதியும், கல்வியாளரும், இலக்கியவாதியும், பன்மொழிப் புலமை மிக்கவருமான அவருக்கு எனது புகழஞ்சலி…

நரசிம்ம ராவ், தமது நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங்-உடன் இணைந்து, லைசென்ஸ்-பெர்மிட் ராஜாங்கமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிக்கான பெருவழியில் திறந்துவிட்டு, பன்னாட்டு போட்டிக்கு வித்திட்டதைப் பற்றி பலரும் வெகுவாக எழுதிக் குவித்துவிட்டனர். எனவே அதனைப் பற்றி மீண்டும் இங்கு எழுத நான் விரும்பவில்லை.

ஆனால், ஒன்றை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறக்கூடாது. ’இந்து வளர்ச்சி விகிதம்’ என சப்பானியாக மிகக் குறைந்த வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்திய பொருளாதாரம் உலகமயமாக, அவரே சூத்திரதாரியாக செயல்பட்டார். இந்து வளர்ச்சி விகிதத்தில் ஐந்து தசாப்தங்களாக வீழ்ந்து கிடந்த இந்தியா முதன் முறையாக, அந்தச் சிறையினின்று வெளிவந்து, புதிய தடம் பதித்தது.

ராவ் பிரதமராக இருந்தபொழுது, ஜூன் 1994 முதல் அக்டோபர் 1997 வரை நான் மத்திய அரசின் உள்துறை செயலராகப் பணியாற்றினேன். உள்துறை செயலர் பதவி என்பது, மத்திய அரசின் மிக முக்கியமான அதிகார மையங்களில் ஒன்றாகும். எனவே, பிரதமருடன் ஏற்கனவே பணிபுரிந்த, அவரது சொந்த மாநிலப் பிரிவின்கீழ் (Cadre) வரும் ஐஏஎஸ் அலுவலர்களையே நியமிப்பது வழக்கம். மேலும், அவர் பிரதமரின் முழு நம்பிக்கைகு உரியவராக இருந்தால் மட்டுமே அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது நடைமுறை.

ஆனால், நான் அவரது சொந்த மாநில ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த அலுவலர் அல்ல, மகாராஷ்டிர மாநில பிரிவினைச் சேர்ந்தவன். மேலும், எனக்கு மத்திய அரசுப் பணியில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு நீண்ட பணி அனுபவமும் கிடையாது. முதன்முறையாக, இணைச் செயலராக 1982-86இல் பணியாற்றினேன்.

பின்னர், இரண்டாவது முறையாக 1993-94இல் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தில் செயலராக இருந்த போதுதான் பிரதமர் நரசிம்ம ராவை முதன் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இத்தனை குறைபாடுகள் இருப்பினும், நான் உள்துறை செயலராக நியமிக்கப்பட்டேன். எனது தேர்வு, எனக்கே வியப்பைத் தந்தது. அன்றைய உள்துறை அமைச்சர் ஷங்கர்ராவ் சவான் தான் இதற்கு காரணம் என்று நான் நம்புகிறேன். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அவர், பிரதமரிடம் என்னைப்பற்றி திறமையான, நேர்மையான அலுவலர் என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு விரிவாக இதை நான் சொல்வதற்குக் காரணம், நரசிம்ம ராவ் வேண்டியவர்களுக்கு சாதகமாக இல்லாமல் திறமைக்கே மதிப்பளித்து, முன்னுரிமை தந்து செயல்பட்டவர். திறமையின் காரணமாகவே, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்துள்ள பதவியை வழங்கினார். மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரும் மிகச் சிறந்த பேச்சாளருமான அடல் பிகாரி வாஜ்பாயை முக்கியமான ஐநா பேரவைக் கூட்டம் ஒன்றுக்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த அனுப்பிவைத்தார். மேலும் எந்த அரசியல் கட்சியையும் சாராத பொருளாதார வல்லுநரான டாக்டர் மன்மோகன் சிங்கை இந்தியாவின் நிதியமைச்சராக தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.

பிரதமர் ராவ் பற்றி நான் முதலில் கண்டபோது வியந்தது அவருடைய சாந்தமும், அமைதியும், தெளிவும் எந்த ஒரு சமயத்திலும் பதற்றம் இல்லாத சுபாவமும்தான். பல்வேறு சிக்கல்களை, அவரது அரசியல் எதிரிகளும், குறிப்பாக அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தே எழுப்பியபோதும், அவற்றையெல்லாம், அமைதியாக சமாளித்தார்.

அவரது ஆட்சியில், அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல நெருக்கடிகளை சந்தித்தார். பாபர் மசூதி இடிப்பு போன்ற விஷயங்களை அவர் கையாண்ட விதம் குறித்து எழுந்த கடுமையான விமர்சனக் கனைகளை நிதானத்துடன் எதிர்கொண்டார். கடுமையான தாக்குதல்கள்தான், இருப்பினும், பாபர் மசூதி இடிப்பு குறித்து அமைக்கப்பட்ட லிபர்ஹான் விசாரனை ஆணையம், நீண்ட காலம் தீர விசாரித்து அளித்த அறிக்கையில், பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் எடுத்த முடிவுக்காக பிரதமரை குற்றஞ்சாட்ட முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. ”ஸ்திதபிரக்ஞன்” என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் நரசிம்ம ராவ் தான்.

இந்திய அரசியல் சாசனத்திற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் நடந்துகொண்டதே அவரது ஆட்சியின் மிகச்சிறந்த பண்பாகும். அரசின் எந்த ஒரு புதிய கொள்கையும் அவரது முடிவுக்காக முன்வைக்கப்படும் பொழுது, எடுத்த எடுப்பிலேயே அவர் கேட்கும் கேள்வி இதுதான்: “இது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா”? மேலும், அரசியல் சாசனத்தின் வாக்கியங்கள் சொல்வதற்கு எதிரானதாக இருப்பது மட்டுமல்ல, அதன் உள்ளார்ந்த கருத்துக்குப் புறம்பானது என தான் கருதும் எந்த ஒரு கொள்கை வரைவையும் அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.

நமது நாட்டின் ’கிழக்கு நோக்கிய’ (தென்கிழக்காசிய நாடுகள் சார்ந்த) கொள்கையை உருவாக்கிய முதல் தலைவர் அவர்தான். அதற்கு முன்னர், நமது பார்வையும் கொள்கையும் மேற்கத்திய நாடுகளையும், வளைகுடா பிராந்திய தேசங்களையும் ஒட்டியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆசியாவில் இந்தியாவுக்கான தனித்த இடத்தை உறுதிசெய்ய, நாம் வங்கதேசம், மியான்மார், தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள தேசங்களுடன் உறவை மேம்படுத்தி வலுப்படுத்துவது இன்றியமையாதது என்று கருதிய ராவ், அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டார்.

அடுத்து, இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்தி, 1992ல், தலைநகர் புது டில்லியில் அந்நாட்டின் தூதரகம் அமைய அனுமதி வழங்கினார். அத்துடன், ஈரானுடன் நெருக்கமான வலுவான உறவுக்கு அடித்தளம் இட்டார். மேலும், இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் பெருவெற்றி அடைய தேவையான ஊக்கமும் உத்வேகமும் அளித்தார் ராவ். வாஸ்தவத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1996 மே மாதத்தில், ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு தயாராக இருக்குமாறு, டாக்டர் அப்துல் கலாமுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு எதிராக அமைந்து, அடுத்து ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிரதமர் வாஜ்பாய் அரசால் 1998-ல் அணுகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் ராவ். 1993 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் பயங்கரவாதம் தலைதூக்கி இருந்தபோதும், தீர்வுகாண்பதில் நம்பிக்கையுடன் இருந்தார். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் இருக்கும்வரை, பிரச்னைக்கான எந்த ஒரு தீர்வையும் தாம் ஏற்றுக்கொள்ள தயார் என, டாக்டர் ஃபரூக் அப்துல்லாவிடமும் பிற காஷ்மீரி தலைவர்களிடமும் தெளிவுபடுத்தினார். “காஷ்மீரின் தன்னாட்சிக்கு வானமே எல்லை! இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் நிலையில்!” என் ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாஸோ-வுக்கு அரசுமுறைப் பயனம் மேற்கொண்டபோது வெளிப்படையாக தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பாக சுமுக செயல்பாடுகளை முன்னெடுக்கும் முன்பாக நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்றது, காங்கிரஸும் ஆட்சியை இழந்தது. இருப்பினும், 8 வருடங்களாக முடங்கிக் கிடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டமைக்காக, ராவ் பாராட்டப்பட வேண்டியவர். அவரது பார்வையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் உரிமை, மறுக்கப்படக்கூடாது.

காஷ்மீரில் எவ்வாறு தேர்தல் நடத்தப்படவேண்டும் என என்னிடம் கூறும்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தனியாக நடத்த திட்டமிட வேண்டும். காங்கிரஸ் தோற்று, ராவ் ஆட்சியிழந்த பின், தேர்தல் ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சியால், பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் கடந்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேவகவுடா தான் பிரதமர்!

பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர சரியான மருந்து தேர்தலே என்று அவர் கொண்டிருந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே, பங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், குறைவான வாக்காளர்கள் பங்கேற்பு இருந்தாலும், தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்திட வலியுறுத்தினார். தேர்தல்கள் நடந்த பின்னர் அந்த மாநிலங்களில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பு நிலை திருப்பியுள்ளது நிதர்சனம்.

நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன், இந்திய அரசு சமாதான பேச்சுவார்த்தையைத் தொடங்கியது நரசிம்ம ராவின் ஆட்சியில்தான். 1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஆயுதப் போராட்டம் நடத்திவந்த தலைமறைவு நாகா தலைவர்களான முய்வா, ஸ்வு ஆகியோரை பாரிஸில் சந்தித்தார் ராவ். திட்டமிட்ட பேச்சுவார்த்தை மூலமாக ஆயுத போராட்டத்தை சுமுகமான முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னோட்டமாக சண்டை நிறுத்தத்திற்கான சாத்தியத்தை அந்த சந்திப்பின்போது பிரதமர் ராவ் ஆராய்ந்தார்.

இதற்கு முன்னர், நாகா பயங்கரவாதம் வெறும் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான பிரச்னையாகவே அணுகப்பட்டது. ஆனால், ராவ் மட்டுமே இதனை அரசியல் சிக்கல் என்று நாகா தலைவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவரது முயற்சியின் விளைவாக 1997 ஆகஸ்ட் மாதத்தில் போராளிக் குழுக்களுடன் ஏற்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமைதிப் பேச்சுவார்தைக்கு வழிவகுத்தது. இதனால், நாகாலாந்திலும், நாகா இனத்தவர் வாழும் பிற வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி திரும்பியது.

இத்தனை சிறப்புக்கும் உரியவர் என்றாலும், ஆட்சியில் இருந்த போதும், பதவி விலகியதை ஒட்டியும் பல்வேறு குற்ற வழக்குகளை எதிர்கொண்ட ஒரே பிரதமர் நரசிம்ம ராவ் மட்டுமே. பல ஆண்டுகள் தொடர்ந்த இந்த வழக்குகளின் புலனாய்வும் நீதிமன்ற விசாரணையும், ராவை நிலைகுலையச் செய்தன. 1996 முதல் 2002 வரை நடைபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஊழல் வழக்கு, செயிண்ட் கிட்ஸ் வழக்கு, லக்குபாய் பதக் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் இறுதியாக ராவ் குற்றமற்றவர் என தீர்ப்பானது.

இந்த வழக்குகள் அனைத்துமே அரசியல் எதிரிகளால் தொடுக்கப்பட்டவை, பல அரசியல் தலைவர்களுக்கு கறுப்புப் பண பட்டுவாடா செய்ததாக எழுந்த ஜெயின் ஹவாலா வழக்கில், பல காங்கிரஸ்காரர்கள் மீதும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் சிபிஐ விசாரணைக்கு ராவ் உத்தரவிட்டதால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். ஜெயின் டைரி குறிப்புகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதைத் தவிர, பிரதமருக்கு வேறு வழியில்லை. மேலும் வழக்கினை உச்ச நீதிமன்றம் வாரம்தோறும் உன்னிப்பாக கண்காணித்து வந்தது. இத்தகைய சூழலில், அவரது கட்சியை சார்ந்தோரே அவரிடம் இரக்கமற்று நடந்துகொண்டது வருந்தத்தக்கது.

1996ஆம் ஆண்டு மே மாதம் பதவி விலகிய பின்னர், முன்னாள் பிரதமர்களுக்கென அரசு ஒதுக்கீடு செய்த வீட்டிலேய தங்கியிருந்தார். டெல்லியில் வசித்துவரும் நானும், வீட்டிற்குச் சென்று அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன். எழுதுவதிலும், குறிப்பாக புத்தகங்கள் எழுதுவது என தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருந்த ராவ் என்னும் மாமனிதர் தனிமையில்தான் வாழ்ந்தார்.

இந்த நாட்டின் சிறந்த தலைவரான அவருக்கு இனியும் காலம் தாழ்த்தாது பாரத ரத்னா வழங்க வேண்டும். ராவ் எத்தகைய மாமனிதர் என்றால், முன்னாள் மத்திய அமைச்சரான நட்வர் சிங் பின்வருமாறு கூறுகிறார்: “ஆன்மிக மற்றும் மதம் சார்ந்த இந்திய மண்ணில் ஆழ வேரூண்றி நிற்பவர். இந்தியாவை அவர் புதிதாகக் கண்டடைய வேண்டிய தேவையும் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவின் தவப்புதல்வனுக்குப் புகழஞ்சலி - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ABOUT THE AUTHOR

...view details