தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

கர்ப்பிணிகளும் கரோனாத் தொற்றும் - மகப்பேறு நிபுணரின் சிறப்புக் கட்டுரை - கர்ப்பிணிகளிடையேயான கரோனா தொற்று

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள். கரோனா தொற்று பரவத் தொடங்கி சில மாதங்களே கடந்துள்ளது. கடந்த சில மாதங்களில் பிரவித்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்ததால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் முதல் ட்ரைம்ஸ்டர் எனப்படும் முதல் மூன்று மாத கால கட்டத்தில் உள்ள சிசுக்கள் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறவிக் குறைபாடு பாதிப்புகளூக்கும் உள்ளாக வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பிணிகளும் கரோனாத் தொற்றும்
கர்ப்பிணிகளும் கரோனாத் தொற்றும்

By

Published : Apr 18, 2020, 10:09 PM IST

உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கே முன்னுரிமை கொடுத்துப் போராடி வரும் நிலையில், எந்த நேரத்திலும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த காலகட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் மகப்பேறு நிபுணரான மருத்துவர் க்ரந்தி சுரேஷ் வோரா,

(மகப்பேறு நிபுணரான மருத்துவர் க்ரந்தி சுரேஷ் வோரா, காந்திநகரில் உள்ள இந்தியப் பொது சுகாதார நிறுவனத்தில் கூடுதல் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கல்லூரி, ப்லூம்பெர்க், மேரிலேண்ட் மாகாணங்களில் மேற்படிப்புகளை முடித்துள்ள க்ரந்தியின் கட்டுரைகள், ப்ளஸ்ஒன், ஜே.எச்.பி.என், உலக சுகாதார மையத்தின் நாளேடுகளில் வெளிவந்துள்ளன.)

ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் காலகட்டம் என்பது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான காலகட்டம். அதே நேரம், அவரது நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் சிறு மாற்றங்களும் நோய்த் தொற்றிற்கு மிக எளிதில் வழிவகுக்கும். இந்தியா, உலக நாடுகள் என அனைத்து இடங்களிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது குறித்தும், நிறைமாதத் தாய் மற்றும் வயிற்றிலுள்ள சிசுக்களின் உடல்நிலை, வைரஸ் தொற்றிலிருந்து இவர்களைப் பாதுகாப்பது குறித்தும் மருத்துவ உலகினரிடையே கவலை சூழ்ந்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள். கரோனா தொற்று பரவத் தொடங்கி சில மாதங்களே கடந்துள்ளது. கடந்த சில மாதங்களில் பிரசித்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்ததால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் முதல் ட்ரைம்ஸ்டர் எனப்படும் முதல் மூன்று மாத கால கட்டத்தில் உள்ள சிசுக்களின் உறுப்புகள் இந்த நிலையில் தான் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது. இந்தக் கரோனா நோய்த் தொற்று காலக் கட்டத்தில் உள்ள இந்த முதல் ட்ரைம்ஸ்டரைச் சேர்ந்த சிசுக்கள் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறவிக் குறைபாடு பாதிப்புகளூக்கும் உள்ளாக வாய்ப்புகள் அதிகம்.

தற்போது வரை இதுபோன்ற பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சீனாவிலிருந்து வெளிவரும் ஆய்வுகள், கரோனா வைரஸ் தொற்றானது, ஜிகா அல்லது ரூபெல்லா நோய்த் தொற்றுகள் போன்று பிறந்த குழந்தைகள், வயிற்றிலுள்ள சிசுக்களை பெருமளவு பாதிப்பதில்லை என்றே கூறுகின்றன. மருத்துவ ஆய்வுகளின்படி ஜிகா வைரஸ் கர்ப்பிணித் தாய்மார்களை பாதித்து, வயிற்றிலுள்ள சிசுக்களிடையே பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றில் அம்னோடிக் திரவம் அல்லது தாய்ப்பாலின் மூலம் வைரஸ் பரவல் கண்டறியப்படாததால் தாயிடமிருந்து சேய்க்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

கர்ப்பிணிகளிடையேயான கரோனா தொற்று குறித்து வுஹானைச் சேர்ந்த 33 கர்ப்பிணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் எந்தவித சிகிச்சையும் இன்றி ஆறாவது நாளில் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டன. மூன்றாவது குழந்தைக்கு பிறப்பதற்கு முன்பே நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவைபட்டு செலுத்தப்பட்டதால், அந்த குழந்தையும் விரைவாகவே குணமடைந்தது. ஆக கரோனா வைரஸ் கருப்பையிலேயே தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுகிறதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் இந்த வைரஸ் தற்போது வரை குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ பெரிய உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இதுகுறித்த முடிவுகளை எட்ட உலக அளவில் பெரும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் இத்தகைய ஆய்வுகள் எதுவும் தற்போதுவரை நிகழ்த்தப்படவில்லை.

உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளின் பிறப்பு விகிதம் கணக்கற்ற அளவில் அதிகரிக்கும். கரோனாத் தொற்று உச்சத்தை எட்டும் இந்தக் காலகட்டத்தில் பல பெண்கள் ஆரம்பகால கர்ப்பத்தை எதிர்கொள்ளும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மிக மிகக் குறைவு. டெல்லியில் ஒரே ஒரு நோயாளி இவ்வாறு கண்டறியப்பட்ட நிலையில், அவரும் ஆரோக்யமான முறையில் தன் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஆனால் இங்கே சுமார் 80% கொரோனா நோய்த்தொற்றுகள் மிதமானவை மற்றும் பெரும்பாலானோர் சோதனைக்குட்படுத்தபடவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே ஆரம்ப கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் பெருமளவு சோதனக்குட்படுத்தப்பட வேண்டும். சுகாதாராத் துறையினரும் மருத்துவத் துறையினரும் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் இது கடினமாக இருக்கலாம். அவர்களுக்கான வழக்கமான மாதாந்திர உதவிகள்கூட கிடைக்காமல் போகலாம். எனவே இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற கரோனாவின் ஆரம்பகால அறிகுறிகள் இருப்பவர்களைப் பரிசோதித்து பாதுகாக்க வேண்டும். கரோனா பாதிப்பிற்குள்ளான தாய்மார்கள் அதித் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும். கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு முன்னெச்சரிக்கைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முகக் கவசங்கள் அணிவது, கைகளைத் தொடர்ந்து கழுவுதல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களைத் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது போன்றவற்றைப் பின்பற்றப்பட வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார மையமும், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மகப்பேறியல் ராயல் கல்லூரியும்கூட வலியுறுத்துகின்றன. சரியான இடைவெளியில் இந்த சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஊரடங்கு அவசரகால மகப்பேறு சிகிச்சை, குறிப்பாக இரத்தப் பரிமாற்றம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுபோன்ற அவசரநிலையில் யாரை அணுகுவது, எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து சுகாதாரத் துறையினரும், மருத்துவத் துறையினரும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். கரோனா தொற்றுள்ள தாய்மார்களுக்கு வழக்கமான தொற்று கட்டுப்பாட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவித பாகுபாடுமின்றி பிற கர்ப்பிணிகள் போன்றே கண்ணியமாக இவர்கள் நடத்தப்பட வேண்டும்.

கரோனா தொற்றுடன் குழந்தைப் பெற்றவர்கள், எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிந்தும், தொடர்ந்து கைகளைக் கழுவிக் கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டலாம். மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் கரோனா தொற்றுள்ள தாய்மார்கள் பாதிப்பில்லாத தங்கள் குழந்தைகளுக்கு நேரடித் தொடர்பற்று தாய்ப்பால் புகட்டலாம்.

கரோனா தொற்றுள்ள தாய்மார்களைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்து தனிமைப்படுத்துதல் உட்பட்ட அனைத்து சிகிச்சை முறைகளும் பின்பற்றப்பட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தாய்மார்களின் குழந்தைகளும் சரியான கால இடைவெளியில் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இவர்களை கண்ணியத்துடனும் அறிவியல் ரீதியிலும் சுகாதாரத் துறை கையாள வேண்டும்.

இந்தக் கொள்ளை நோயின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதால், இதுகுறித்த ஆய்வுகளும், குறிப்பாக கருக்கலைப்பு, குறைமாத பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது உள்ளிட்டவைக் குறித்தும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வைராலஜி துறையினரால் படிப்படியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுகுறித்த சிறப்பு ஆய்வுகளும் தொடர் கண்காணிப்பும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details