தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

இந்தியா – சீனா மோதலில் பாகிஸ்தானின் பங்கு! - கல்வான் மோதல்

இந்தியா- சீனா ஆகிய இரு சக்திகளுக்கு இடையே எல்லைகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பகுதிகளை உள்ளடக்கி தனது புதிய வரைபடத்தை வெளியிடுவதன் மூலம் சீனாவை மகிழ்வித்ததுள்ளது பாகிஸ்தான். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவத்தில் பாகிஸ்தான் பங்கு என்ன என்பது தொடர்பாகவும் இந்த மோதலை மூலம் பாகிஸ்தான் அடைய நினைக்கும் பலன்கள் தொடர்பாகவும் மூத்த பத்திரிக்கையாளர் ஜெய் குமார் வெர்மா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்..!

Pakistan's role between India China standoff
Pakistan's role between India China standoff

By

Published : Aug 25, 2020, 10:36 AM IST

சீனாவை உலகின் சூப்பர் பவராக மாற்றத் துடித்துக்கொண்டிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங். சீன பொருளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகள் சீன இறக்குமதியை நம்பி இருக்கின்றன. முன்னேறிய பல நாடுகளை முந்திக் கொண்டு உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக உருவெடுத்திருக்கிறது சீனா.

இந்தியா விஷயத்தில் சீனா அதிருப்தி அடைந்திருக்கிறது. காரணம், சீனாவின் கனவுத் திட்டமான Belt and Road Initiative (BRI) திட்டத்தை இந்தியா நிராகரித்திருப்பதுதான். இந்த திட்டத்தின் மூலம், ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்கா ஆகியவற்றில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்பதும், இந்த பிராந்தியங்களை சாலை மற்றும் கடல் மார்க்கமாக தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் சீனாவின் கனவு.

எல்லையை விரிவாக்கம் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டிவரும் சீனா, இந்த திட்டத்தின் மூலம் தனது செல்வாக்கை பலமடங்கு உயர்த்தி இருக்கிறது. இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகம், பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் உள்ளிட்டவற்றை அது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.

கடந்த மே மாதம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற தைவான் அதிபரின் பதவி ஏற்பு விழாவில், பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்டது, G-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூனில் அழைப்பு விடுத்தது, அப்போது இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை குறித்து இருவரும் விவாதித்தது, அதே ஜூன் மாதம், கரோனாவால் சீனா மீது கோபம் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அதிபர் ஸ்காட் மோரிசன் உடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடியது போன்ற சம்பவங்களும் சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. நிதானமாக அதேநேரத்தில் உறுதியாக அமெரிக்காவின் பக்கம் இந்தியா சாய்கிறது என்று சீனா எண்ணுகிறது.

பொருளாதார வல்லரசாக உருவெடுத்திருக்கும் சீனா, தென் சீன கடல் விவகாரத்தில் தனது ராணுவ பலத்தை காண்பித்து அருகில் உள்ள தைவான், வியட்நாம், ஜப்பான் ஆகியவற்றை அது அச்சுறுத்தி வருகிறது. அதோடு, நமது நாட்டிற்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில், நமது நாட்டின் சில பகுதிகளை அது ஆக்கிரமித்திருக்கிறது. நமது நாட்டிற்கு சொந்தமான கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ உயர் அலுவலர்கள் மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதன் காரணமாக சில பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கி இருக்கிறதே தவிர முழுமையாக பின்வாங்கிவிடவில்லை. நமது பகுதிகள் சிலவற்றை, சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, சீனா மூலம் பல்வேறு பலன்களை பெற்று வரும் பாகிஸ்தான், இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லையோரத்தில் உள்ள பல பகுதிகளில் ஷெல் தாக்குதல் உள்பட கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது.

கடந்த ஜூனில், காஷ்மீரில் உள்ள பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் ஆதரவாளர்களுக்கு ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் அனுப்ப முயன்றது பாகிஸ்தான். அந்த விமானத்தை நமது எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த ஜூனில் மட்டும் 150 முறை தாக்குதல் நடத்தி இருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கவும் பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில்தான், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரையும், குஜராத்தில் உள்ள ஜூனாகத்தையும் தனது நாட்டுடன் சேர்த்து புதிய பாகிஸ்தான் வரைபடத்தை இம்மாதம் 4ம் தேதி வெளியிட்டார் பிரதமர் இம்ரான் கான். ஆகஸ்ட் 4ஆம் தேதியை இம்ரான் கான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருக்கிறது.

ஏனெனில், அந்த நாள், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த நாளுக்கு முந்தைய நாள். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து தனது நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததற்கு எதிராக பாகிஸ்தான் அரசு ஒன்றும் செய்யவில்லை என அந்நாட்டு மக்கள் கோபம் கொண்டிருந்த நிலையில், அதனை தணிக்கும் நோக்கிலேயே இந்த புதிய வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. சட்டப்பிரிவு 370ஐ இந்தியா நீக்கியதற்கு சரியான பதிலடியாக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது.

பாகிஸ்தான் கேபினெட்டின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த புதிய வரைபடம், பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று இம்ரான் கான் கூறி இருக்கிறார். எதிர்பாராத ஒரு நடவடிக்கை இது என கூறி, இதனை வரவேற்றிருக்கிறார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான ஷா மெகமூத் குரேஷி.

பாகிஸ்தானின் இந்த செயல் ஓர் அரசியல் அபத்தம் எனக் கூறி கண்டித்துள்ள வெளியுறவு அமைச்சகம், நகைப்புக்குரிய இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமானதும் கிடையாது, இதற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடையாது என தெரிவித்திருக்கிறது.

இம்மாதம் 5ஆம் தேதிக்கு முன்பாக காஷ்மீரில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது பாகிஸ்தான். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஜெய் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா, அன்சார் காஸ்வாட்புல், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அனைவரையும் சுட்டுக் கொன்றது இந்திய பாதுகாப்புப் படை.

இந்த நடவடிக்கைக்கு “All-Out” என பெயரிட்டிருந்தது நமது ராணுவம். ஐ.எஸ்.ஐ. அமைப்பின் பயிற்சி பெற்ற சுமார் 300 பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் நுழைய காத்திருக்கிறார்கள். எனினும், அவர்கள் நுழைய முடியாத அளவுக்கு எல்லையில் தீவிர கண்காணிப்பை நமது ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

எல்லையில் இந்திய – சீன ராணுவங்கள் மோதல் போக்குடன் உள்ள நிலையில், தனது புதிய வரைபடத்தின் மூலம் சீனாவை மகிழ்வித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இந்த மோதலில், 40க்கும் மேற்பட்ட தனது வீரர்களை சீனா இழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், உயிரிழப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

சீனாவின் உத்தரவுப்படி, பாகிஸ்தானை பின்பற்றி நேபாளமும் இந்திய பகுதிகளுக்கு உரிமை கொண்டாடும் விதமாக புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரைபடத்தில், இந்தியாவின் லிம்பியாதுரா, லிபுலேக், கலாபானி ஆகியவை நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஷேக்ஸ்கம் பள்ளத்தாக்கு, அக்ஸய் சின் ஆகிய பகுதிகள் சீன வரைபடத்தில் இடம் பெற்றுவிட்டதால், அந்த பகுதிகளை பாகிஸ்தான் தனது புதிய வரைபடத்தில் சேர்க்கவில்லை.

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சர்வதேச நிதியம், சீனா ஆகியவற்றின் உதவியைப் பெற்று காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிதி தடுப்பு அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது. இதனால், சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்தாவிட்டால், கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளது சர்வதேச நிதி தடுப்பு அமைப்பு.

தன்னிடம் பெற்ற கடனை பாகிஸ்தான் திருப்பி அளிக்காவிட்டால், அதன் அசையா சொத்துக்களை சீனா தனதாக்கிக் கொள்ளும். குவாடர் துறைமுகம், பலுசிஸ்தானில் உள்ள கனிம வளங்கள், கில்ஜித், பல்திஸ்தான் போன்றவற்றை பாகிஸ்தான் இழக்க நேரிடலாம்.

இந்தியாவை மிரட்டிப் பார்க்கும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. லடாக்கில் ஏப்ரல் 2020-க்கு முந்தைய நிலைக்கு சீன ராணுவம் திரும்ப வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

லடாக் எல்லையில் இந்தியா தனது படைகளை மட்டும் குவிக்கவில்லை. ராணுவ விமானங்களையும் எல்லையில் அது தயார் நிலையில் நிறுத்தி உள்ளது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரான்சும் ரபேல் போர் விமானங்களை முன்கூட்டியே அளித்திருக்கிறது. அமெரிக்கா, வியட்நாம், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், தைவான் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

லடாக் எல்லையில் தனது ராணுவத்தை பின்வாங்கச் செய்ய சீனா கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிக எதிர்ப்புகளை உள்நாட்டில் சந்தித்து வருகிறார். இந்தியாவை தாக்குவதன் மூலம் அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப அவர் முயலக்கூடும்.

இந்தியாவை சீனா பணியவைத்துவிடும் என்றும் அதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்றும் இம்ரான் கான் எண்ணி இருந்தார். ஆனால், சீனாவும் பாகிஸ்தானும் எதிர்பார்க்காத அளவுக்கு கடும் எதிர்வினையை சர்வதேச ஆதரவுடன் வெளிப்படுத்தி இருக்கிறது இந்தியா. முழு அளவிலான போருக்கு சீனா செல்லாது என்பதும், இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்பதும் தற்போது உறுதியாகிவிட்டது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட விவகாரத்தில் சர்வதேச ஆதரவைப் பெறுவதில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிளவுகளை கட்டுப்படுத்த முயல வேண்டும். அதோடு, இந்தியா–ஆப்கனிஸ்தான் உறவில் தலையிடுவதையும் அது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பலுசிஸ்தானில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் இருக்கின்றன. பலூச் மற்றும் சிந்தி தேசியவாதிகள் தற்போது கைகோர்த்திருக்கிறார்கள். இந்த சூழலில், இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஆதரிப்பதை கைவிட்டுவிட்டு, அது தனது பொருளாதாரத்தையும், சட்டம் ஒழுங்கையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: எல்லைப் பிரச்னை: சீனாவின் பரிந்துரையை நிராகரித்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details