மஹாராஜா ரஞ்சித் சிங் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜூன் 29, 2020 அன்று சீக்கிய யாத்ரீகர்களுக்காக வரலாற்று சிறப்பு மிக்க கர்தார்பூர் வழித்தடத்தை திறப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. ஆனால் இந்தியாவில் தற்போது நோய்த் தொற்று அதிக அளவில் இருப்பதால், பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு பச்சைக் கொடி காட்ட இயலாது என்று, இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மஹாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி, ஜூன் 29 அன்று கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை சீக்கிய யாத்ரீகர்களுக்காக திறந்து விட முடிவு செய்துள்ளோம், எங்களது இந்த நிலைப்பாட்டை இந்திய அரசுக்கு தெரிவிக்கிறோம்” என்று பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆயினும், பாகிஸ்தான் போலியான நல்லிணக்கத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாக இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. “ஜூன் 29ம் தேதிக்கு இரண்டு நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து விடுவதாக பாகிஸ்தான் தெரிவித்திருப்பது, போலியான நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, பயணத்திற்கு ஒருவாரம் முன்பே பாகிஸ்தானிடம் இந்தியத் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகே இந்தியத் தரப்பில் பயணத்திற்கான பதிவு தொடங்கப்படும்” என்று இந்திய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சீக்கியர்களின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி கர்தார்பூர் வழித்தட பணிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார். இறுதியாக பாபா குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளின்போது வழித்தடம் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று இந்த வழித்தடம் மூடப்பட்டது. இந்த நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.
“சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, வழித்தடத்தை மீண்டும் திறக்க இந்தியா வழிவகை செய்ய முன்வர வேண்டும்,” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தற்போது கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் தினமும் 150 பேர் இறக்கும் அளவுக்கு நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.
"கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, தற்போது எல்லைத் தாண்டிய பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளைக் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று இந்திய அரசு அலுவலர்கள் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அடுத்த ஏழு நாள்களுக்குள் இங்குள்ள கரோனா தொற்று எண்ணிக்கையை 50 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் சிடிஏசையத் ஹைதர் ஷாவுக்கு வெளியுறவுத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாகவே அந்நாட்டிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருதரப்பிலும், நியமிக்கப்படும் தூதரக அலுவலர்களின் கடத்தல், மிரட்டல் போன்ற சம்பவங்களால் இருதரப்பு உறவும் மோசமாகும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாகிஸ்தான் தனது ஒப்பந்தத்தின்படி தனது எல்லைக்குட்பட்ட ரவி ஆற்றின்மீது பாலம் கட்டவில்லை. பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வழித்தடம் முழுவதும் பக்தர்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்று இந்திய அலுவலர்கள் கூறியுள்ளனர்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ் தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் பகுதியில் கழித்ததால், புனிதப் பகுதியாக அவ்விடம் கருதப்படுகிறது. இங்கிருந்து நான்கு கிமீ தூர அளவுக்கு இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் தேவ் வரை வழித்தடம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இப்போது செலவு செய்யத் தயங்கினால் விளைவுகள் மோசமானதாக மாறும்!'