அண்மையில் கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் அந்த மாநிலத்தின் தேர்தல் அரசியலில் நிகழவிருக்கும் பெரும் மாற்றத்தின் முன்னோட்டமாக விளங்கியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) பெரிதும் சார்ந்திருந்த இரண்டு பெரிய சிறுபான்மை கட்சிகளில் ஒன்று பெருமளவில் அந்த கூட்டணியை விட்டு விலகிச் செல்வது போலத் தோன்றுகிறது.
யூடிஎஃப் கூட்டணி இரண்டு கிறித்துவ முதலமைச்சர்களை முன்பு கேரளாவில் முன்னிறுத்தியிருந்தாலும், சமீபத்தில் பெரும்பான்மையான கிறித்துவ வாக்குகள் அந்த முன்னணியின் கையை விட்டுப் போய்விட்டன. யூடிஎஃப் பெரிதும் நம்பியிருந்த வாக்குப் பகிர்வு ஃபார்முலா முறிந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
மாநிலத்திற்குள் கிட்டத்தட்ட புதிதாய் நுழைந்திருந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இதன்மூலம் பயனடைந்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் கிறித்துவ இறையியல் மார்க்ஸிய இயங்கியல் தத்துவத்திற்கு எதிரானது என்றாலும், பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தேவாலயத்துடன் காலங்காலமாகக் கொண்டிருந்த வரலாற்றுப் பகையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பரஸ்பர ஒத்துழைப்புக்கான லோகாயத பாதையை வகுத்துக்கொண்டு விட்டது. இத்தனைக்கும் பினராய் சமீபத்தில் ஒரு கிறித்துவ பிஷப்பைப் பற்றி நாகரிகமற்ற ஒரு வார்த்தையைப் பிரயோகித்து உள்ளார்.
ஆண்டாண்டு காலமாகவே காங்கிரஸை ஆதரித்துவந்த ஓர் இனம் ஏன் அதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இனங்களின் இணக்கம் என்பதில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த மாநிலமான கேரளா இப்போது அதன் இரண்டு பெரிய சிறுபான்மைக் குழுக்களுக்கு இடையில் ஓர் இனத் துருவநிலை பகையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு நகைமுரண்.
மாநிலத்தில் யார் ஆகப்பெரிய ஆதிக்கமுள்ள இனம் என்பதில் ஒரு பொதுவெளிக் கருத்தியல் யுத்தம் நிகழ்ந்துகொண்டிருப்பதை அந்த மாநிலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. யூடிஎஃப்-பில் பிரதானமான அங்கமாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) இருந்து வந்திருக்கிறது. தன் இனத்தின் சாந்தமான குரல்களை எதிரொலித்துக் கொண்டிருக்கும் அந்தக் கட்சி கடந்த 15 வருடங்களில் நடந்த தேர்தல்களில் 18-லிருந்து 23 வரையிலான தொகுதிகளை வென்றிருக்கிறது.
எனினும் ஐயூஎம்எல்லின் இரண்டு செயல்கள் துருவநிலைப் பிரிவை உண்டாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று, உள்ளாட்சித் தேர்தலில் தீவிரவாத இஸ்லாமிய கருத்தியல் சார்பு கொண்ட வெல்ஃபார் பார்ட்டி என்ற அமைப்பை ஐயூஎம்எல் தானிருக்கும் யூடிஎஃப் கூட்டணியில் கொண்டுவர முயன்றது. இரண்டு, ஐயூஎம்எல் தலைவர் பணக்காட் சாதிக் அலி ஷிஹாப் தங்கல், கட்சி நாளேட்டில் தான் எழுதிய ஒரு கட்டுரையில், ஹைய சோபியாவை மீண்டும் மசூதியாக மாற்றிய துருக்கியை ஆதரித்தார்.
(ஹைய சோஃபியா என்பது 6-ஆம் நூற்றாண்டில் இப்போதைய இஸ்தான்புல்லில் – அப்போது அதன் பெயர் கான்ஸ்டாண்டிநோபிள் - கட்டப்பட்ட மரபுவழி கிறித்துவ உயர்தேவாலயம்; அப்போது இருந்தது கிழக்கு ரோமானிய சாம்ராஜ்யம் அல்லது பைஜாண்டிய சாம்ராஜ்யம். 1453-ல் ஆட்டோமான் ஆட்சியின் போது அது மசூதியாக மாற்றப்பட்டது. 1934-ல் துருக்கியில் மதச்சார்பற்ற ஆட்சிதந்த முஸ்தாஃபா கெமல் அதை அருங்காட்சியகமாக மாற்றினார். 2020-ல் அது மீண்டும் மசூதியாக மாற்றப்பட்டது).
சிபிஎம் கட்சி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கல் ஒரு மதக்கட்டிடத்தின் மாற்றத்தை ஏன் ஆதரித்தார் எனக் கேள்வி கேட்டு யூடிஎஃப்பையும், ஐயூஎம்எல்லையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. யூடிஎஃப்புக்கு மற்றுமொரு சங்கடமும் நிகழ்ந்தது. அதன் கூட்டணியில் இருந்த கிறித்துவ அங்கமான கேரளா காங்கிரஸ் (எம்) என்ற கட்சி விலகிச் சென்று ஜோஸ் கே மணியின் தலைமையில் எல்டிஎஃப்பில் சேர்ந்தது. இது கிறித்துவ ஆதிக்கமுள்ள மத்திய திருவிதாங்கூர் பகுதில் இருந்த யூடிஎஃப்பின் வாய்ப்புகளைப் பாதித்தது. இந்தக் காரணிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உள்ளாட்சித் தேர்தல் போக்கை மாற்றியது. அதன் விளைவாக யூடிஎஃப் தனது வழமையான கோட்டைகள் பலவற்றில் தன் பலத்தை இழந்தது.
இருவேறு சிறுபான்மைக் குழுக்களுக்கிடையே இருந்த இந்தத் துருவநிலைப் பகையை உணர்ந்துகொண்ட பாஜக மெனக்கெட்டு கிறித்துவர்களை தாஜா பண்ண ஆரம்பித்தது. பிரதம மந்திரி நரேந்திர மோடி, மிஜோரம் ஆளுநர் பிஎஸ் சிரிதரன் பிள்ளை மூலமாக கேரளாவில் இரண்டாவது பெரிய கத்தோலிக்கர் அல்லாத குழுவான மலங்காரா சிரியன் சர்ச்சுடன பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். தேவாலயத்தில் நூறுவருடமாக இருந்த பிரச்சினையை கத்தோலிக்கர் அல்லாத மதப்பிரிவின் பிஷப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் பிரதமர் தீர்த்துவைத்தார்.
இதற்கிடையில் கேரளாவிலிருந்து கார்டினல்கள் குழு ஒன்று சென்று பிரதம மந்திரியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தது. அரசாங்க நலத் திட்டங்களின் பலன்களில் 80 சதவீதத்தை குறிப்பிட்ட ஒரு இனம் மட்டுமே அனுபவித்து வருவதால், தங்கள் இனத்து மக்களுக்கு அவை போய்ச் சேர்வதில்லை என்று அந்தக் குழு தனது வேண்டுகோள் மனுவில் சொன்னது. கேரளாவில் தனது தேர்தல் கணக்கு மிகவும் கடினமாக இருப்பதைக் கண்ட பாஜகவுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது. ஏனென்றால் இஸ்லாமியர்களின் கூட்டணி ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சிய கிறித்துவர்கள் காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப்பை தலைமுழுகி விலகிப் போனது.
இப்போது யூடிஎஃப் சேதத்தைக் கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கிறது. யூடிஎஃப்பில் இருக்கும் இஸ்லாமிய கட்சியான ஐயூஎம்எல்லின் கூட்டணிக் கொள்கை ஆதிக்கம் பற்றிய கிறித்துவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த பிகே குன்கலிக்குட்டி கேரளா முழுக்க இருக்கும் பிஷப்புகளின் வீடுகளுக்கு விஜயம் செய்து கொண்டிருக்கிறார். குன்கலிக்குட்டி இஸ்லாமியக் கட்சியில் இருக்கும் ஒரு சாந்தமான, நவீன குரல். பல கிறித்துவ தலைவர்களுடன் அவர்க்கு நல்லுறவு உண்டு.
ஆயினும் யூடிஎஃப்பின் மரியாதையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குன்கலிக்குட்டியின் சமாதான நடவடிக்கைகள் வெற்றி பெறுமா, பலன் தருமா என்ற கேள்விக்கு வாக்குச் சீட்டுத்தான் பதில் சொல்ல முடியும். காங்கிரஸ் குடும்பத்து ஏந்தல் கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாக இருக்கிறார். என்றாலும் இடது, வலது, மீண்டும் வலது என்று சுழன்றுக் கொண்டே இருக்கும் தேர்தல் யுத்தத்தில் ஜெயித்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது யூடிஎஃப்புக்கு கடுமையானதாக இருக்கலாம். ஏனென்றால் கேரள மாநிலத்தில் ஏற்கனவே நிலைத்து நின்ற தேர்தல் கணக்கு இப்போது கலைக்கப்பட்டு, புதிய அரசியல் கணக்குகளுக்கும், கணிப்புகளுக்கும் இடம்விட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது.
இதையும் படிங்க:கேரளாவை உலுக்கிய அபயா கொலை வழக்கு!