இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)-க்கும் இடையே ஆகஸ்ட் 13ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. முழுமையான தூதரக உறவை மேற்கொள்வதற்கும், இரு தரப்பு உறவில் இயல்பு நிலை ஏற்படுவதற்கும் இது வழி வகுத்துள்ளது.
மேற்காசியாவில் இதுவரை நிலவிவந்த பதற்றத்தை தணிப்பதற்கான முதல் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
அரபு – இஸ்ரேல் உறவில் ஏற்பட்டுள்ள இந்த திருப்புமுனை, மேற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் அரபு – இஸ்ரேல் இடையேயான கசப்புணர்வை போக்க இந்தியா முக்கிய பங்காற்றுவதற்கான வாய்ப்பை இது அளித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகால முயற்சியின் பலன்.
இந்த ஒப்பந்தம் மேற்காசியாவின் மோதல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கும்.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தை ஏற்படுவதை உறுதிப்படுத்த முடியும். பாலஸ்தீனம் என்ற தனி நாடு உருவாவதற்கான வாய்ப்பு தொலைவில் இருந்தாலும், அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
பாலஸ்தீனம் நாடு உருவாகும் என்றால் மட்டுமே, இதுபோன்ற ஒப்பந்தத்தை இஸ்ரேலுடன் மேற்கொள்வது பற்றி பரிசீலிப்போம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நட்பு நாடான சவூதி அரேபியா தற்போது நிபந்தனை விதித்திருக்கிறது. எனினும், சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதையில் பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த ஒப்பந்தம் பாலஸ்தீன ஆட்சியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். பாலஸ்தீனப் பிரச்னைக்கு அப்பாற்பட்டு பல பத்தாண்டுகளுக்கு முன்பே எகிப்தும் ஜோர்டானும் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன. அந்த பாதையில், தற்போது மற்றொரு முக்கிய அரபு நாடும் பயணித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றார். அந்த பயணத்தின்போது, இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். அவர் அப்போது பாலஸ்தீனம் செல்லவில்லை.
எனினும், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இரண்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் இந்தியாவின் கொள்கை அப்போது உறுதிப்படுத்தப்பட்டது. 1992இல் இருந்து இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவுகளை கொண்டுள்ள போதிலும், பாலஸ்தீனத்திற்கும் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா தன்னை முன்னிருத்தியது.
தனக்கு ஆதரவாக உள்ள நாடுகளிடம் இருந்து தன்னை ஓரம்கட்டும் முயற்சியாகவே இஸ்ரேல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்பந்தத்தை பார்க்கிறது பாலஸ்தீனம். எனினும், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதில் கடந்த 26 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு.