தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

"அரசியல் அழுத்தத்தால் தமிழக மீனவர்கள் கைது" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி! - Tamil Nadu fisherman

நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரையிலும் 130 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஈடிவி பாரத் தமிழ்நாட்டின் தலைமை நிருபர் எம்.சி.ராஜனுக்கு பேட்டி அளித்த, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த கைதுகளின் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக கூறுகிறார். இலங்கையில் விரைவில் வரவிருக்கும் தேர்தல்களையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 6:12 PM IST

Updated : Nov 10, 2023, 7:05 PM IST

சென்னை:இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே வருகிறது. நமது கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கி வருவதாகவும் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கைப்பற்றிக் கொண்டு செல்வதாகவும் தமிழக மீனவர்கள் கூறுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இது தொடர்பாக பலமுறை மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் கடிதம் மூலமாக எடுத்துக் கூறி வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமே 64 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக வெளியுறவு அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, 74 தமிழ்நாட்டு மீனவர்கள் நடப்பு ஆண்டில் கடந்த ஜன் மாதம் வரையிலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது மட்டுமல்ல, தற்போது இலங்கையிலிருந்து வரும் கடற்கொள்ளையர்களாலும் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கதையாகியிருக்கிறது. இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் தொலைபேசி மூலம் பேசுகையில், கடற்கொள்ளையர்களை தடுப்பதற்காக இலங்கை அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசு சார்பில் கடற்கொள்ளையை தடுக்கும் விதமான கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா, இதில் ஒரு அரசியல் அழுத்தம் இருப்பதாக குறிப்பிட்டார். "நாங்கள் கைது செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறோம். தேர்தலும் கூட வரவிருக்கிறது" எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியான பாக் ஜலசந்தி, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தளமாகும். இருப்பினும் இலங்கை அரசு தொடர்ச்சியாக மீனவர்களை கைது செய்தும் வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பை வேறு நாட்டு மீனவர்கள் சொந்தம் கொண்டாடுவதை தங்கள் நாடு ஏற்காது என்றும் டக்ளஸ் கூறினார்.

"1974ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், 1976ம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக எங்களிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பததாக அவர்கள் கூறுவதால் தான் நாங்கள் கைது செய்ய நேரிடுகிறது. இரு நாட்டிலும் உள்ள தமிழர்கள், தங்களுக்கிடையே தொப்புள் கொடி உறவை பகிர்ந்து கொண்டுள்ளனர். தாயும், பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறுவேறுதானே. எங்கள் மீனவர்களின் பிரச்சனையை புறந்தள்ள முடியாது. மீன்களுக்கு தான் எல்லை இல்லை மீனவர்களுக்கு உண்டு " இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

மீன்பிடி படகுகள், வலைகள் போன்ற உபகரணங்களில் தமிழ்நாட்டு மீனவர்களுடன், இலங்கை மீனவர்களால் போட்டி போட முடியாது. இந்திய மீனவர்களின் லாரி போன்ற படகுகளுக்கு முன்னே எங்கள் மீனவர்களின் படகுகள் சிறிய ஆட்டோ போன்றவை என டக்ளஸ் கூறினார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் கீழ் வளம் மிக்க கன்னியாகுமரி கடற்பகுதியை இலங்கை மீனவர்கள் இழந்தனர். 1974ம் ஆண்டு வரையிலும் 163 ஏக்கர் தீவான கச்சத்தீவு ஆட்கள் வசிக்காத நிலப்பரப்பாகவும், சர்ச்சைக்குரிய நிலப்பரப்பாகவும் இருந்தது. அந்த ஆண்டில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி, கச்சத்தீவை இலங்கையுடையது என ஒப்புக் கொண்டு இருநாடுகளுக்கிடையிலான கடற்பரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும் பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லை என்றாலும், இதற்கு முன்பு வரையிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் இதுவரையிலும் முடிவு ஏதும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டார்.

"இலங்கையில் தடைசெய்பட்ட இழுவை மடி வலைகளுடன், அத்து மீறி எல்லை தாண்டி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு மாநில அரசு மற்றும் இந்திய அரசு மாற்றுவழிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தையின் போது, அவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பதை குறித்து தெரிவித்தனர். ஆனால் அது நடப்பது போல் தெரியவிலை. எளிதாக இலங்கையில் இருக்கும் மீன்வளங்களை எடுத்துச் செல்ல நினைக்கிறார்கள். ஒவ்வொரு முறையும், இந்திய மீன்வர்கள் தரப்பில் இருந்து, இரண்டு வருடம் எங்களுக்கு மீன் பிடிக்க வேண்டும் என்று கேட்கின்றனர்"

" 20- வருடங்களாக. இப்படி இரண்டு இரண்டு வருடங்கள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் கூறினார்கள். தமிழக படகுகள் ஆந்திர எல்லைக்குள் போக முடியாது. போனால் அங்கு தெலுங்கு மீனவர்கள், தமிழ் மீன்வர்களைத் தாக்குவார்கள். இந்திய நாட்டிலேயே, மாநில கடல் எல்லைக்குள் மீன்பிடி செய்யமுடிவதில்லை. அப்படி இருக்க எல்லை தாண்டி வருவது சட்ட விரோதம் தான். தமிழக மீன்வர்கள், பரந்த இந்திய கடல் எல்லைக்குள் பிடிக்கலாம், சர்வதேச கடல் எல்லைகளில் மீன் பிடிக்கலாம். சமீபத்தில் தான் வெளியுறவத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்தார். இதைப்பற்றி நாங்கள் பேச வாய்ப்பு அமையவில்லை. இருப்பினும் பிரச்சனையின் தீவிரம் குறித்து அவர் நன்றாக அறிந்திருக்கிறார்" எனவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

Last Updated : Nov 10, 2023, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details