தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

உலகம் இதுவரை வெளியிடாத கவிதைத் தொகுப்பு 'முத்தம்' - காதல்

முத்தம், இந்த உலகத்தின் மொத்த சத்தும் அதில் அடங்கியிருக்கிறது. சொல்லப்போனால் உலகில் உள்ள அனைத்து சொத்தும் ஏன் உலகின் சொத்தே முத்தம்தான். முத்தம் என்பது காமத்தின் குறியீடாகப் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அது உண்மையில்லை. முத்தம் என்பது அனைத்திற்குமான தொடக்கம்.

story-on-kiss-day
story-on-kiss-day

By

Published : Feb 13, 2020, 10:32 PM IST

Updated : Feb 13, 2020, 11:24 PM IST

"காதலின் உச்ச சுகம் கூடல் என்பர் முத்த சுகம் அறியாதோர்". முத்தத்தில் சைவம், அசைவம் என்று எந்த வகையும் கிடையாது. முத்தம் என்பது தனி வகை. இந்த உலகில் உள்ள அனைவருக்கும் முதல் முறை என்பது என்றும் மறக்க முடியாதது. குறிப்பாக முதல் முறையாக வாங்கிய முத்தத்தை யார் எப்போது, எங்கு நினைத்தாலும் அருவி சாரல் ஒன்று மனதை எழுப்பும் உணர்வை பெற முடியும்.

ஊடல் முடிவதும் முத்தத்தாலே, கூடல் தொடங்குவதும் முத்தத்தாலே. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆதி முதல் அந்தம்வரை வலியின்றி எவ்வித மதிப்பையும் இழக்க வைக்காமல் நம்மை சுத்தமாக ஆட்சி செய்வது முத்தம் என்று யாரோ ஒரு கவிஞன் எழுதியதாக நியாபகம்.

இந்த உலகத்தில் அனைத்து ரகசியங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் ரகசியமாக கொடுக்கப்படும் முத்தத்திற்கு மட்டும்தான் எல்லையில்லை. பாகுபாட்டை களைவது காதல் என்றால் பாகுபாடற்ற அந்த காதல் உலகத்திற்குள் முதன்முதலாக நம்மை வரவேற்பது முத்தம்.

முத்தம்

முத்தத்தை இப்படித்தான் கொடுக்க வேண்டும், இங்குதான் கொடுக்க வேண்டும் என கட்டளை போடுபவர்கள் முத்தத்தை முழுதாக உணராதவர்கள் என்று அர்த்தம். ஏனெனில் முத்தம் ஒன்றுதான் எங்கு இருந்தாலும் அதன் இயல்பிலேயே இருக்கக்கூடியது. அது எவ்வளவு பெரிய ஆச்சரியம்.

ஒட்டுமொத்த கூடலின் பெரிய சுகம் எதில் இருக்கிறது தெரியுமா? அக்கூடல் முடித்த பின்பு, வியர்வைக் கடலில் நனைந்த பிறகு கொடுக்கப்படும் அந்த ஒற்றை முத்தத்தில். அந்த ஒற்றை முத்தம்தான் கூடலின் ஆதிப்புள்ளி. அந்த ஆதிப்புள்ளி மீண்டும் ஆனந்த யாழை மீட்க வைக்கும். அதன் அருகில் ஒரு புள்ளி வைத்து முற்றுப்பெற வைக்க முயல்பவருக்கு முத்தம் இன்னொரு புள்ளியை வைத்து மீண்டும் தன்னை தொடர வைக்கும். முத்தம் ஒரு பொல்லாத முடிவிலி.

முத்தம்

இந்த உலகம் இதுவரை இதழில் அச்சிட்டு எத்தனையோ கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதுவரை இதழில் அச்சிட்டு வெளியிடப்படாத இனியும் வெளியிடவே முடியாத மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு காதலோடு கசிந்துருகி கொடுக்கப்படும் முத்தக் கவிதை தொகுப்பு.

முத்தம்

முத்தம் எப்போதும் பேரதிசய கவிதைத் தொகுப்பு. அந்த அதிசயத்தை யாராலும் தொகுத்து வெளியிட முடியாது. வேண்டுமெனில் உணர்ந்துகொண்டு உள்வாங்கிக்கொள்ளலாம். அந்தத் தொகுப்பின் கவிஞர், பிழை திருத்துநர், அணிந்துரையாளர், ஏற்புரையாளர், பதிப்பகத்தார் என அனைத்து கதாபாத்திரங்களும் நாம்தான். முக்கியமாக இந்தத் தொகுப்பிற்கு முடிவுரை கிடையாது. பல நூற்றாண்டுகளாக ஏராளமான கவிஞர்களால் உள்வாங்கிக்கொண்டிருக்கும் இதன் பாகங்களுக்கு சுவாரசியமும் குறைந்ததில்லை. சுவாரசியம் குறையாத, ரசனைமிக்க அந்தத் தொகுப்பை முழுதாக உணர வாழ்த்துகள்...

இதையும் படிங்க:பாலுமகேந்திரா - கண்களில் காடு வைத்திருந்தவர்

Last Updated : Feb 13, 2020, 11:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details