சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனத்தின் இளைஞர்களைக் கவர ரியல்மீ என்ற புதிய பிராண்டை கடந்த ஆண்டு தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிவந்த ரியல்மீ மொபைல் போன்கள், ரெட்மீ மொபைல் போன்களுக்கு நேரடிப் போட்டியாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ரியல்மீ நிறுவனம், புதிய மாடலாக ரியல்மீ எக்ஸ் என்ற மொபைல் போனை நேற்று வெளியிட்டுள்ளது. 6.53 இன்ச் ஓ.எல்.இ.டி. டிஸ்பிளேவைக் கொண்ட ரியல்மீ எக்ஸ் சினாப்டிராகன் 710 பிராசஸரைக் கொண்டது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஓப்போவின் 6.0 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது.
கேமராவைப் பொறுத்தவரை பின்புறம் சோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற ஐ.எம்.எக்ஸ். 586இன் 48 மெகாபிக்சல் கேமராவையும், மற்றொரு 5 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. முன்புறம் 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்ஃபி கேமராவைக் கொண்டது.
3765mah பேட்டரியைக் கொண்ட இது அதிவேகமாக சார்ஜ் செய்ய வசதியாக ஓப்போவின் வூக் (VOOC) சார்ஜ் வசதியையும் பெற்றுள்ளது. போலார் வொய்ட், ஸ்பேஸ் புளு என்று இரு நிறங்களில் கிடைக்கும் இந்த மொபைல்போன் கொரிலா கிளாஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
4ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத் திறனைக் கொண்ட மொபைல் ரூ. 16,999க்கும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத் திறனைக் கொண்ட ரூ. 19,999க்கும் விற்கப்படவுள்ளது. சக்திவாய்ந்த பிராசஸர், பாப்-அப் கேமரா, இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்ட "ரியல்மீ எக்ஸ்" ரெட்மீயின் "போக்கோ எஃப் 1"க்கு கடும் போட்டியாக விளங்கும். இந்த மொபைல்போன் ஜூலை 18ஆம் தேதி இரவு 8 மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.