மும்பை: மைக்ரோமேக்ஸ் கைப்பேசிகளின் அறிமுகம் தினம் நெருங்கிவிட்டதையடுத்து, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கங்களின் வழியாக வரவிருக்கும் புதிய கைப்பேசிகள் குறித்து மறைமுகப் பதிவுகளை இட்டு வருகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வரவிருக்கும் அதன் 'இன்' தொடர் கைப்பேசிகள் மீடியாடெக் ஹீலியோ ப்ராசஸர்களால் இயக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆக புதிய 'இன்' ரக தொகுப்புகளில் மீடியாடெக் ஹீலியோ ஜி 35, ஹீலியோ ஜி 85 சிப்செட்டுகளால் இயங்கும் என்று முன்னர் வெளியான தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய அடையாளமாக களம் காணும் ‘இன்’
தற்போது வெளியாகவிருக்கும் கைப்பேசிகள் மைக்ரோமேக்ஸ் இன் 1 ஏ, இன் 1 என பெயரிடப்பட்டு ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை என்கிற விலை நிர்ணயிக்கப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சீன, கொரிய நிறுவனங்களான சியோமி, ரியல்மி, சாம்சங் நிறுவனங்களின் இடைநிலை ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நேரடியாக போட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் புதிய 'இன்' தொடர் கைப்பேசிகளில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
மீடியா டெக் ஹீலியோ ஜி 35 கொண்டு இயங்கும் மைக்ரோமேக்ஸ் மாடலில் 6.5 அங்குல எச்டி+ தொடுதிரை கொண்டு ரூ.10,000 என்கிற விலையில் அறிமுகமாகலாம். இது 32 ஜிபி சேமிப்பகத்துடன் 2 ஜிபி ரேம் | 32 ஜிபி சேமிப்பகத்துடன் 3 ஜிபி ரேம் என இரண்டு வகைகளில் வரலாம். மேலும் 5000 எம்ஏஎச் மின்கல சேமிப்புத் திறனைக் கொண்டு ஆண்ட்ராய்டு 10 (ஸ்டாக்) இயங்குதளத்துடன் வெளியாகலாம்.
படக்கருவிகளை பொறுத்தவரையில், ஒன்றில் பின்பக்கத்தில் இரட்டை சென்சார்களுடனும், மற்றொன்றில் மூன்று சென்சார்களுடனும் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.