கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், இணையப் பயன்பாடு 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எம்ஐ தனது பிரவுசர்களின் உதவியுடன் இந்தியர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்கு அளிப்பதாக இணையத்தில் போலி செய்திகள் பரவின.
இந்தப் போலி செய்திகளால் பலரும் இணையத்தில் எம்ஐ பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பதிவிடத் தொடங்கினர்.
இந்தச் செய்திகள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த எம்ஐ நிறுவனம், தற்போது இந்தச் செய்திகள் போலியானவை என்று கூறியுள்ளது. எம்ஐ பிரவுசர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கும் ஒரு சிறு காணொலி தொகுப்பை எம்ஐ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.