இதுகுறித்து அந்த வங்கியின் தலைவர் ரஜீனிஷ் குமார் கூறியதாவது, யோனோ கேஷ் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் ஏடிஎம் இயந்திரங்களில் கார்டு இல்லா பரிவர்த்தனை மேற்கொண்டு பணம் எடுக்கலாம். இந்தியாவிலேயே முதன்முறையாக கார்டு இல்லா பண பரிவர்த்தனையை அறிமுகம் செய்யும் முதல் வங்கி எஸ்பிஐ வங்கி ஆகும். இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 எஸ்பிஐ ஏடிஎம்களிலும் பயன்படுத்தலாம்.
எஸ்பிஐ அறிமுகம் செய்துள்ள யோனோ கேஷ் செயலி! - எஸ்பிஐ வங்கி
யோனோ கேஷ் செயலி மூலம் ஏடிஎம்களில் கார்டு இல்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி பணம் எடுக்க விரும்பினால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து யோனோ கேஷ் செயலியை அவர்களது செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பிறகு 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். பிறகு பண பரிவர்த்தனைக்காக அங்கீகாரமளிக்கும் 6 இலக்க அடையாள எண் பதிவுச்செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி முலமாக அனுப்பப்படும்.
இந்த ஆறு இலக்க பரிவர்த்தனை அங்கீகார எண்ணை பெற்ற 30 நிமிடங்களுக்குள் அருகில் உள்ள யோனோ கேஷ் பாய்ன்டிற்கு சென்று பணம் எடுப்பது அவசியம். யோனோ கேஷ் பாய்ன்டில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் பின் மற்றும் அங்கீகார எண்ணை ஏடிஎம் மையத்தில் பதிவிடுவது முக்கியம்.
இந்த புதிய வசதி கார்டு மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க உதவுவதுடன், பணபரிவர்த்தனைக்கு பாதுகாப்பையும் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.