தமிழ் சினிமாவில் எப்படி அஜித் - விஜய் ரசகிர்களுக்கு இடையே தீர்க்க முடியாத பகை இருக்கிறதோ, அதேபோல் டெக் நிறுவனங்களான கூகுளின் ஆண்ட்ராய்ட் சிறந்ததா அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் சிறந்ததா என்ற மோதல் இருந்து கொண்டே இருக்கும்.
கூகுள் நிறுவனத்தின் சேவைகள் குறைந்த விலையிலும், பயன்படுத்த எளிமையாகவும் இருக்கும். ஆனால், பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் விஷயத்தில் ஆப்பிள் நிறுவனத்தை கூகுளால் நெருங்கக் கூட முடியாது.
கூகுள் நிறுவனம் தனியுரிமை தொடர்பான பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில், தனியுரிமை தொடர்பான மிக முக்கிய அப்டேட்டை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
பயனாளர்கள் செல்லும் இடங்கள் தொடர்பான தகவல்களை கூகுள் தொடர்ந்து சேமிக்கும். அப்படி, சேமிக்கப்படும் தகவல்களை டெலிட் செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்தும் பயனாளர்கள், தாங்கள் செல்லும் இடங்கள் குறித்த தகவல்களை மூன்று மாதங்களிலோ அல்லது 18 மாதங்களிலோ தானாக டெலிட் ஆகும்படி செட் செய்து கொள்ளலாம்.