டெல்லி: அதிகரித்து வரும் ஓடிடி பயனர்களைக் கருதி, அமேசான் ப்ரைம் வீடியோ, தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் உடன் இணைந்து, கைப்பேசிகளுக்கான மாத சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.டி தரத்தில் மட்டும் கண்டுகளிக்கக் கூடிய இந்த சேவைக்கு, அமேசான் நிறுவனம் சந்தா விலையை மாதம் ரூ.89ஆக நிர்ணயித்துள்ளது. முதல் 30 நாட்கள் இலவச அணுகலை வழங்கும் 'ப்ரைம் வீடியோ' அதன்பிறகு சந்தா கட்டணம் வசூலிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தச் சேவை முதலில் ஏர்டெல் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.299 திட்டத்தின் மூலம், ப்ரைம் வீடியோ மொபைல் திட்டம், தினசரி 1.5 ஜிபி அளவு இணையம், வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றையும் அனுபவித்துக் கொள்ளலாம். அதேபோல, பிரத்யேக ரூ.89 ப்ரைம் வீடியோ திட்டத்தின் மூலம் ஏர்டெல் பயனர்களுக்கு இலவசமாக 6 ஜிபி அளவிலான இணைய சேவை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்தும் அடங்கிய திட்டமாக, ரூ. 349 உள்ளது. 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில், அனைத்து விதமான தகவல் சாதனங்களிலும் ப்ரைம் வீடியோவை அணுகும் வசதி, விளம்பரமற்ற ப்ரைம் மியூசிக் என மேலும் பல ப்ரைம் சேவைகளை இலவசமாக அனுபவித்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்திலும் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, தினசரி 2ஜிபி இணையம் போன்றவற்றைப் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.