இந்தியர்களின் பல வருட காத்திருப்பிற்கு பிறகு இறுதியாக தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்கும் யமஹா எம்டி15 பைக் கிடைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த மார்ச் 15 ஆம் தேதியன்று நடைபெற்ற விழாவில், இந்திய மார்க்கெட்டிலும் எம்டி15 பைக்கை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்தது யமஹா நிறுவனம்.
எம்டி15 பைக்கை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் குதூகலித்த நாள் அது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சி சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது. சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் யமஹா எம்டி15 பைக்கை இந்திய மார்க்கெட் அப்படியே பெறவில்லை. ஏராளமான வசதிகள் விடுபட்டு போயிருந்தன. இது கூட ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.
சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் எம்டி15 பைக்கை யமஹா நிறுவனம் அப்படியே இந்தியாவில் களமிறக்காது. இங்கு விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்திய மார்க்கெட்டிற்கான எம்டி15 பைக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என அதன் ரசிகர்கள் ஏற்கனவே எதிர்பார்த்தே இருந்தனர்.
அப்படி இருக்கையில் அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த விஷயம் விலைதான். யமஹா எம்டி15 பைக், இந்திய மார்க்கெட்டில் 1.36 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற திகிலூட்டும் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் ஒப்பிடுகையில், இந்த விலை மிகவும் அதிகம் என வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், இந்திய வேரியண்ட்டின் முன்பகுதியில் யூஎஸ்டி ஃபோர்க்ஸ் (USD Forks) இடம்பெறவில்லை. ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்படவில்லை. கலர்புஃல் அலாய் சக்கரங்களும் விடுபட்டு போயுள்ளது. இப்படி பல்வேறு ஏமாற்றங்களை இந்திய வாடிக்கையாளர்கள் சந்தித்துள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் சமூக வலை தளங்களில் யமஹா நிறுவனத்தை கடுமையாக வசைபாடி வருகின்றனர். ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சிலர் இது 'MT15' அல்ல, 'Empty 15' என தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான எம்டி15 பைக்கிற்கு ஆரம்பத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், யமஹா நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள யமஹா பைக்குகளுடன் தனது பெரும்பாலான பாகங்களை எம்டி15 பகிர்ந்து கொண்டுள்ளது. இதுதவிர இந்தியாவில்தான் யமஹா எம்டி15 பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் விலையை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எனவே யமஹா எம்டி15 பைக், மலிவான ப்ரைஸ் டேக்கை தாங்கி வரும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில், யமஹா எம்டி15 பைக்கிற்கு மிக அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அதன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குமுறி கொண்டுள்ளனர். யமஹா எம்டி15 அறிமுக விழாவில், விலை அறிவிப்பின்போது பார்வையாளர்களிடம் இருந்து பலத்த கரகோஷங்களும், கைத்தட்டல்களும் எழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக மயான அமைதி நிலவி கொண்டிருந்தது.
தற்போது #Empty15 என்ற ஹேஷ்டேக் பைக் ஆர்வலர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது. யமஹா எம்டி15 பைக்கில், 155 சிசி, லிக்யூட் கூல்டு, 4 ஸ்ட்ரோக், எஸ்ஓஹெச்சி, 4 சேனல், ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 19.3 பிஎஸ் பவர் மற்றும் 8,500 ஆர்பிஎம்மில் 14.7 என்எம் டார்க் திறனை உருவாக்கக்கூடியது.
யமஹா எம்டி15 பைக்கில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமை மட்டுமே பெற்றுள்ளது. முன்பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் (Telescopic Forks) மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. யமஹா எம்டி15 பைக் டெலிவரி வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியாளர்களான கேடிஎம் 125 ட்யூக் (1.18 லட்ச ரூபாய்), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (1.11 லட்ச ரூபாய்), யமஹா எப்இஸட்25 (1.33 லட்ச ரூபாய்) மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 (1.12 லட்ச ரூபாய்) ஆகிய பைக்குகளுடன் ஒப்பிடுகையிலும், யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிகம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.