விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, அதன்பின்னர் நடக்கும் ஒன்பது நாள்கள் கொண்டாட்டங்களும் பிரசித்திபெற்றவை. அந்த வகையில் இன்று மிகவும் அரிதான விநாயகர் கோயில் குறித்து பார்க்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள தோலக்கு மலையின் சிகரத்தில் இரண்டு ஆயிரத்து 500 அடி உயரத்தில் விநாயகர் சிலையொன்று அமைந்துள்ளது.
இக்கோயிலில் விநாயகர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல்புறத்தில் உள்ள வலக்கையில் கோடரியையும், இடக்கையில் உடைந்த தந்தமும் வைத்திருக்கிறார்.
அபய முத்திரையுடன் காணப்படும் கீழேயுள்ள வலக்கையில் ருத்ராட்ச மாலையையும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் காணப்படுகிறார்.
முன்னொரு காலத்தில் பரசு ராமருடன் ஏற்பட்ட போரில் விநாயகரின் தந்தம் உடைபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஆகவே, இவரை மக்கள், “ஏகாதந்தா” என அழைக்கின்றனர். அந்தக் கிராமம் பரஸ்பல் என்றே அழைக்கப்படுகிறது. இது பரசுராமரின் கோடரியை குறிக்கும் பர்ஸா என்ற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகும்.
இங்கிருக்கும் விநாயகரின் சிலையை சிந்தாக் நாகவன்ஷி மன்னர்கள் 11ஆம் நூற்றாண்டில் நிறுவியதாக வரலாறுகள் கூறுகின்றன.