தூத்துக்குடி: கரோனா பரவலையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல்- முதியவர்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது
திருச்செந்தூர் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி, முதியவர்கள், குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை (ஏப்.14) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படுகிறது. இதற்கிடையே கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள், தகுந்த இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பக்தர்கள் கோயில் வளாகத்துக்குள் அசுத்தம் செய்யக்கூடாது.
பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்தும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரும், உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பிறகு, நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அணிந்து வரும் காலணிகளை காலணி பாதுகாப்பு இடத்தில் தாங்களே சுயமாக வைத்து திரும்ப அணிந்து செல்ல வேண்டும்.
கோயில் வெளிப்புறம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோயில் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கடைகளிலும், சிற்றுண்டி சாலைகளிலும் தகுந்த விலகல் விதிமுறைகளை எந்த நேரமும் பின்பற்ற வேண்டும். சுவாமி சிலைகளை பக்தர்கள் தொடுவது தவிர்க்கப்பட வேண்டும். தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை அங்கபிரதட்சணம் போன்ற வேண்டுதல்களை தவிர்க்க வேண்டும்.
முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கோயிலில் நடைபெறவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் திருவீதி உலாக்கள் போன்றவற்றில் அரசின் நிலையான இயக்க நடைமுறை அமலில் உள்ளதால், கோயில் பழக்கவழக்கப்படியும், ஆகம விதிப்படியும் பூஜைகள் நடைபெறும். அதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
பூஜைகள் முடிந்த பின்னர் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி தரிசனம் செய்து முடிந்த பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. அதேபோல் 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் போன்ற இணையான நோய்களை கொண்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் போன்றவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.