கரூர் தான்தோன்றிமலை வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் என்ற பிரபு (27). பி.இ.பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (23). டெக்ஸ்டைல் தொழிலாளி. மோகன்ராஜின் உறவுக்கார பெண் கணபதிபாளையத்தில் வசித்து வருகிறார். இவரும், மதன்ராஜின் தாயாரும் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளனர்.
இந்நிலையில், மோகன்ராஜின் உறவுக்கார பெண் மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் கட்டாததைக் கேட்டு, மதன்ராஜ் அப்பெண்ணை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த பெண் இதுகுறித்து மோகன்ராஜிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கணபதிபாளையம் சென்ற மோகன்ராஜ், மதன்ராஜை சந்தித்து தனது உறவுக்கார பெண்ணை திட்டியதற்காக கடுமையாக திட்டி பேசியுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய மதன்ராஜ், தனது நண்பர் பூபதியுடன் மோகன்ராஜிடம் சண்டையிட அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியுடன் வெளியே வந்த மோகன்ராஜ், மதன்ராஜை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இதனைத் தடுக்க வந்த பூபதியையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.