சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி ( 23). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை காதலித்து 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு பிரச்னை செய்ததால், மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
பின்னர், தாய் கொண்டம்மாள் (52) மற்றும் அண்ணன் கிரிபாபு (26) ஆகியோருடன் முரளி வசித்து வந்தார். பிரிந்துபோன மனைவியை பல முறை அழைத்தும் வரவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த முரளி, தினமும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் முரளியின் தாய் மற்றும் அண்ணன் புகார் ஒன்றை அளித்தனர். அதில், மதுபோதையில் இருந்த முரளி சுவர் மீது மோதி இறந்துவிட்டதாக கூறினர்.