ஆவடி அடுத்த அரிக்கம்பேடு கிராமத்தில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்கியிருப்பதாக சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் காவலர்களோடு சம்பவ இடத்துக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ஒரு கட்டட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சில இளைஞர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அதில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த பாட்சா (22) என்பது தெரியவந்தது. பின்னர், உளவுத்துறை காவலர்கள் அவரை ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடந்த 2015ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஆற்று பாதை வழியாக தப்பி மேற்கு வங்காளத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ரயில் மூலமாக பெங்களூரு, தமிழ்நாட்டில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்து கூலி வேலை செய்துள்ளார். அதன்பிறகு, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார்.
பின்னர், ஆவடி அருகே அரிக்கம்பேடு பகுதியில் வட மாநிலத்தவர் என கூறிக்கொண்டு கட்டட பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலியுடன் மணமகன் ஓட்டம்: 'மகள் காணவில்லை' எனத் தாயார் புகார்!