யானைக்கவுனி விநாயகர் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில்சந்த் (74). இவர் ஆட்டோ, டூவீலருக்கு ஃபைனான்ஸ் வழங்கும் தொழில் செய்து வந்திருக்கிறார். இவருக்கு மனைவி புஷ்பாபாய் (70), மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆவர். 13 ஆண்டுகளுக்கு முன்பாக மகன் சீத்தலுக்கு பூனேவை சேர்ந்த ஜெயமாலா என்பவரை தலில்சந்த் திருமணம் செய்துவைத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
திருமணமான சில ஆண்டுகளிலேயே சீத்தலுக்கும், ஜெயமாலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்னர் ஜெயமாலா பூனே நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், அங்குள்ள காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை புகாரையும் அளித்துள்ளார். விவாகரத்து வழக்கில் ஜீவனாம்ச தொகையை அளிப்பது தொடர்பாக இரு வீட்டாருக்கும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் ஜெயமாலா தரப்பில் இருந்து 5 கோடி ரூபாய் வரை ஜீவனாம்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி கரோனா தடுப்பு முன்களப்பணியாளர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடையுடன் இருவர் தலில்சந்த் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் சீத்தலை கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் தலில்சந்த் புகாரளித்துள்ளார். விசாரணையில் ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ் மற்றும் விகாஷ் ஆகியோர்தான் சீத்தலை தாக்கியவர்கள் என தற்போது தெரியவந்துள்ளது. எனவே இக்கொலைக்கு ஜெயமாலா குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.