கள்ளக்குறிச்சி மோரை பாதை தெருவில், திருநாவுக்கரசு என்பவரும் அவரது தங்கை சுசீலா என்பவரும் அருகருகே வீடுகளில் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் சுசீலா குடும்பத்தாருக்கு சொந்தமாக செயல்படாத அரிசி ஆலை ஒன்று இருக்கிறது. சுசீலாவின் கணவர் இறந்து விட்ட நிலையில், அந்த அரிசி ஆலையை பாதுகாக்க தனது அண்ணன் திருநாவுக்கரசுக்கு அவர் பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சுசீலா குடும்பத்திற்கு தெரியாமல் ஆலையை ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த திருநாவுக்கரசு, விற்ற பணத்தில் தங்கை சுசீலாவுக்கு சிறிதளவு கொடுத்துவிட்டு, எஞ்சிய பணத்தை கொஞ்ச நாள் கழித்து தருவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொழில் நஷ்டத்தால் பணம் தேவைப்படுவதாகவும், எனவே தங்களுக்கு தரவேண்டிய பணத்தை தரும்படியும் சுசீலா மற்றும் அவரது மகன் சர்வேஷ்வரன் ஆகியோர் நேற்றிரவு (அக்டோபர் 22) திருநாவுக்கரசிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது பணம் கொடுக்க மறுத்ததுடன், மறுபடியும் பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் திருநாவுக்கரசு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.