சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அறிஞர் அண்ணா தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார்(38). இவரது மனைவி கவிதா (33).
தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், இரண்டு வயதில் தர்ஷனி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அவரது மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். இரண்டு குழந்தைகளும் வீட்டு வாசலில் விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.
இதையடுத்து கவிதா வெளியே வந்து குழந்தைகளை பார்த்தபோது அவரின் இரண்டு வயது குழந்தை தர்ஷினி மட்டும் காணவில்லை, அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது எனத் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி!