சென்னை:கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மாவேலிகரவைச் சேர்ந்த மருத்துவர் ஜசரியா பால் என்பவரின் தந்தை குரியன் பவுலாஸ். இவர் கேரளாவில் சென்ட்ரல் ராவன் கோட் ஸ்பெஷலிஸ்ட் என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு கடன் பெற முயற்சி செய்தபோது, சென்னையைச் சேர்ந்த ஜெயராஜ், அஸ்வின் ராவ் ஆகியோர் தொடர்பில் வந்துள்ளனர். இவர்கள் தங்களை தொழிலதிபராக அறிமுகப்படுத்தி, கடன் பெற்றுத் தருவதாகக் கூறி குரியன் பவுலோசை நம்ப வைத்தனர்.
மேலும், வெளிநாட்டில் இருந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறினர். ஆனால் இதற்கு 45 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தனர். இதனால் குரியன் பவுலோஸ் 45 கோடி ரூபாயை சிறிது சிறிதாக ஜெயராஜ், அஸ்வின் ராவ் ஆகியோரின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியுள்ளார்.
‘கெட் வெல் சூன் தாதா’ - கங்குலி குணமடைய மணல் சிற்பம்!
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கடன் பெற்று தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஜெயராஜ், அஸ்வின் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குரியன் பவுலோஸ் உடனடியாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வங்கிக் கணக்கு, கைப்பேசி எண்களை வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடியபோது, அண்ணாநகர் ஆபீஸர்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்த ஜெயராஜை கைது செய்தனர். ஆனால் அஸ்வின் மட்டும் நீண்ட நாட்களாக காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
கைது செய்யப்பட்ட ஜெயராஜிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் அஸ்வின் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் பெங்களூருக்கு விரைந்து சென்று, தோட்டா பனஸ்வாடி பகுதியில் பதுங்கியிருந்த அஸ்வின் ராவை(54) கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.