வங்கியிலிருந்து பேசுவது போன்று வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களைத் திருடி பணமோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவினர் டெல்லியில் கைதுசெய்து சென்னை கொண்டுவந்துள்ளனர்.
தீபக்குமார், தேவகுமார், வில்சன் என்ற அந்த மூன்று பேரில் வில்சன் என்பவர் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் பணிபுரியும் ஒரு உயர் அலுவலரின் கார் ஓட்டுநராகவும் இருந்துவந்துள்ளார்.
என்ன நடந்தது?
வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களைத் திருடி அதன்மூலம் பெருமளவில் பணமோசடி நடைபெறுவதாகப் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்பட்டுவரும் வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு புகாரளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடந்துவந்தது.
இந்நிலையில், திருடப்பட்ட வாடிக்கையாளர் வங்கி விவரங்களை வைத்து சோதனை மேற்கொண்டதில், வாடிக்கையாளர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் அனைத்தும், ’Mobikwik’ என்ற செயலி மூலம் சென்றிருப்பது தெரியவந்தது. பணப்பரிமாற்றம் செய்வதற்காகத் தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஏராளமான தனியார் பணப்பரிவர்த்தனை செயலிகள் செயல்பட்டுவருகின்றன. அதேபோன்ற ஒரு பணபரிமாற்ற செயலிதான், மோபிக்விக்.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
- பிரபல வங்கிகளில் உள்ள கால் சென்டர்கள், செல்போன் கம்பெனிகளிலிருந்து, வாடிக்கையாளர்களின் விவரங்களைக் கள்ளத்தனமாக இந்த மோசடியாளர்கள் பெறுகின்றனர்.
- அப்படிப் பெற்ற அவர்களின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு வங்கி, வருமான வரி, ஓய்வூதிய திட்ட அலுவலகம், இப்படிப் பலவகையான பெயர்களைச் சொல்லி வாடிக்கையாளர்களிடம் விவரங்களைக் கேட்கின்றனர்.
- வங்கி, அரசு நிறுவனங்கள் என்றவுடன் வாடிக்கையாளர்களும் அதனை நம்பி தங்களுடைய விவரங்களைத் தெரிவிக்கின்றனர்.
- வாடிக்கையாளர்களை ஏமாற்றி வாங்கப்பட்ட அந்த விவரங்களை, மோசடி நபர்கள் இந்த மோபிக்விக் செயலியில் பதிவுசெய்கிறார்கள்.
- அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணிற்கு ஒரு OTP நம்பர் வந்திருக்கும். அதனைத் தெரிவிக்கக் கூறும் மோசடியாளர்களிடம் வாடிக்கையாளர்களும் அந்த எண்ணைக் கூறுகிறார்கள்.
- வாடிக்கையாளர்கள் OTP எண்ணைக் கூறிய அடுத்த நொடியே, வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணம், உடனடியாக இந்த மோபிக்விக் செயலியின் மூலம் திருடப்படுகிறது.