ஈரோடு: தம்பதி கொலை சம்பவத்தில், மூவரைக் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சிட்டபுல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், விவசாயக் கூலித்தொழிலாளியான ராமசாமி. இவர் தனது மனைவி அருக்காணியுடன் வசித்து வந்தார். இவர்களது மகள் மேனகாவுக்குத் திருமணம் நடைபெற்று கொடுமுடியில் கணவருடன் வாழ்ந்துவருகிறார்.
இச்சூழலில் தீபாவளிப் பண்டிகைக்காக தனது கணவருடன் மேனகா, தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஊரின் எல்லைப் பகுதியில் சிலர் மதுபோதையில் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டு இருந்துள்ளனர். இச்சமயத்தில் மேனகா அவ்விடத்தை கடக்கும்போது, அவர் மீது பட்டாசை எறிந்து கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு நீதிகேட்க சென்ற மேனகாவின் பெற்றோருக்கும், இளைஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரார் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். இச்சூழலில் நேற்று (நவ 14) காலை மேனகாவின் பெற்றோர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அதில் இக்கொலையின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, சாமிநாதன், கிருபாசங்கர் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.