சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி பகுதியில் கொல்கத்தாவைச் சேர்ந்த மனோஜ் (22), மாலிக் (26) இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். அதேப் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்கள், வழக்கம்போல் பணி முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மனோஜ் மற்றும் மாலிக் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த மனோஜ், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்நிகழ்வு குறித்து தகவல் தெரிந்தபின் அங்கு வந்த சங்கர் நகர் காவல் துறையினர், மயக்க நிலையில் இருந்த மனோஜ், மாலிக் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், மனோஜ் மற்றும் மாலிக்கைத் தாக்கி செல்போன் பறிக்க முயன்ற நாகல்கேணியைச் சேர்ந்த பாலாஜி (19), மோகன் (18), அசன் பாஷா (18) ஆகியோரைக் கைது செய்தனர்.
கஞ்சா வாங்க பணம் தர மறுத்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! கைது செய்யப்பட்டவர்களை விசாரித்ததில், கஞ்சா வாங்குவதற்கு பணம் இல்லாததால் மனோஜ் மற்றும் மாலிக் இருவரிடமும் 500 ரூபாய் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் அவர்களைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சங்கர்நகர் காவல் துறையினர் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குத்துச்சண்டை பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!