ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் திர்த்தோல் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி, குழந்தைகள் நல காப்பகத்தில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் வீடு திரும்ப நினைத்த சிறுமி கட்டாக்கில் உள்ள ஓம்பி சதுக்கத்தில் பேருந்திற்காக காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால், திர்த்தோலுக்குச் செல்வதற்குப் பதிலாக அந்த நபர் அச்சிறுமியை கடிரட்பட்னா கிராமத்திலுள்ள கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அச்சிறுமியை அறையில் அடைத்துவைத்து கொடூரமான முறையில் 22 நாள்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே சிறுமி அலறல் சத்தம் கேட்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.