சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் திவான் என்ற அக்பர். தொழிலதிபரான இவர் மண்ணடியில் அச்சு நிறுவனமும் ஆடைகள் மொத்த வியாபாரம் மற்றும் பர்மா பஜார் மின்சாதனக் கடைகளுக்கு மொத்த பொருள் விற்பனையும் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி முத்தியால்பேட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்ற அக்பர், மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார். நள்ளிரவு இரண்டு மணியளவில் வீடு திரும்ப வெளியே வந்த அவரை, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடத்திச் சென்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அக்பரை கட்டிப்போட்ட அந்த கும்பல், இரண்டு நாட்கள் அவரை அடித்து துன்புறுத்தினர். மேலும், இரண்டு கோடி ரூபாய் பணம் தந்தால் மட்டுமே அக்பரை உயிரோடு விடுவோம் என அக்பரின் தம்பிக்கு ஃபோன் செய்து மிரட்டினர். இதனால் பயந்து போன அக்பரின் தம்பி, 2 கோடி ரூபாயை அக்கும்பலிடம் தந்து தன் அண்ணனை மீட்டு வந்தார்.
இதனையடுத்து, இந்நிகழ்வு குறித்து கடந்த 24ஆம் தேதி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அக்பர் புகார் அளித்ததன்பேரில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், ஆல்பர்ட் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவ்பீக் என்பவர் இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதும், அவரது உத்தரவின்படியே கூட்டாளிகள் 6 பேர் இக்கடத்தலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இந்நிலையில், தவ்பீக் மீது தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், நாம் மனிதர் கட்சி, இஸ்லாமிய தற்காப்பு படை மற்றும் இறைவன் ஒருவனே போன்ற அமைப்புகளை நடத்தி இளைஞர்கள் பலரை அடிப்படைவாத செயல்களுக்கு ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கிலும் தொடர்புடைய தவ்பீக், ஹவாலா பணப் பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத அமைப்புகளுக்காக திரட்டிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், கடத்தப்பட்ட தொழிலதிபர் அக்பர் மற்றும் தவ்பீக் ஆகிய இருவருமே ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதும், இவ்விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே கடத்தல் நிகழ்வு நடந்ததும் அம்பலமாகியுள்ளது. அதேபோல், அக்பரை மீட்க கொடுக்கப்பட்ட பணமும் ஹவாலா பணம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அடிப்படைவாத சக்திகளுக்கும் தொடர்பிருக்கும் காரணத்தால், கூடுதலாக க்யூ பிரிவு காவல்துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். தவ்பீக்கை பிடிக்க மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தயார் படுத்தப்பட்டுள்ள நிலையில், தவ்பீக்கின் காதல் மனைவி சல்மாவை திருச்சியில் வைத்து காவலர்கள் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக அவர் சென்னை வந்ததும், வெளிநாடு தப்பிச்செல்ல தவ்பீக் திட்டமிட்டதும் தெரிந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் கடந்த 5 மாதங்களாக வாடகை வீட்டில் தங்கியிருந்த சல்மா, தற்போது கர்ப்பமாக இருப்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வர காவல்துறை திட்டமிட்டுள்ளது.
திருச்சியில் கைது செய்யப்பட்ட தவ்பீக்கின் மனைவி சல்மா இந்நிலையில், தவ்பீக் கூட்டாளிகளால் தொழிலதிபர் அக்பர் கடத்தப்பட்ட இடத்திலும், அவர் கடத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு விடுதியிலும் அலைபேசி அழைப்புகள் மற்றும் சிக்னலை வைத்து சைபர் க்ரைம் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், தொழிலதிபர் அக்பரும் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரிடமும் முத்தியால்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: இருவர் கைது; மற்றொருவர் தலைமறைவு!