திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையம் அருகே உள்ள முள்ளம்பட்டியில் வசித்துவருபவர் பொண்ணுபாப்பு (55). இவரது மகள் பூங்கொடிக்கும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நம்ம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் கனகராஜ் குடிப்பழக்கம் காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக, கணவனைப் பிரிந்து பூங்கொடி வடமதுரையில் உள்ள தாய் வீட்டில் வசித்துவந்துள்ளார். தொடர்ந்து கனகராஜ் பலமுறை சமாதானப்படுத்தியும் பூங்கொடி அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனச் செல்ல மறுத்துள்ளார்.
இதனிடையே இன்று (டிச. 10) கனகராஜ் பூங்கொடியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதற்காகச் சென்றுள்ளார். அங்கு பொண்ணுபாப்பு அவரது மகள் பூங்கொடி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் கனகராஜ், மனைவி பூங்கொடியை தன் ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் பூங்கொடி உடன்படாததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கனகராஜ் ஒளித்துவைத்திருந்த அரிவாளால் தனது மாமியார் பொண்ணுபாப்புவின் கழுத்தில் வெட்டி கொலைசெய்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொலையுண்ட பொண்ணுபாப்புவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.