நாகப்பட்டினம்: 260 லிட்டர் சாராயத்தைக் காவல் துறையினர் கைப்பற்றி இரண்டு பேரைக் கைது செய்தனர்.
வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இன்று மாலை மதுவிலக்கு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்வதற்காக வழிமறித்தனர். காவலர்களைக் கண்டதும் அந்த வாகனம் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. இதையடுத்து சோதனையிலிருந்த காவலர் வினோத், இருசக்கர வாகனத்தில் சென்று அந்த காரை நாகூர் அருகே முட்டம் பகுதியில் மடக்கிப் பிடித்தார்.
பின்னர், அந்த காரை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலம் சாராய பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அவர்கள் நாகை சங்க மங்கலத்தைச் சேர்ந்த ஜெகபர் சாதிக், காரைக்கால் மாவட்டம் வரிச்சுக்குடியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது.
சிறையிலிருந்த சிறுமி உயிரிழப்பு: உதவி ஆய்வாளர் பணி நீக்கம்!
இவர்கள் காரைக்கால் மாவட்டத்திலிருந்து, 13 பொட்டலங்களில் 260 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள சாராய பொட்டலங்களுடன், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.