வேலூர்:காவல் துணை தலைவர் அலுவலக வளாகத்திலேயே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
டிஐஜி அலுவலக வளாகத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை; சந்தன மரம் அபேஸ்! - வேலூர் டிஐஜி அலுவலக சந்தன மரம்
வேலூர் சரக காவல் துணை தலைவர் அலுவலகத்தில் இருந்த இரண்டு சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் அண்ணா சாலையிலுள்ள வேலூர் சரக காவல் துணை தலைவர் அலுவலக வளாகத்தில் 8 ஆண்டுகள் பழமையான இரண்டு சந்தன மரங்கள் இருந்துள்ளன. இச்சூழலில் நேற்று (அக். 23) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இரண்டு மரங்களையும் வெட்டி கடத்தியுள்ளனர்.
காலையில் மரம் கடத்தப்பட்ட விவரம் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று (அக். 24) வேலூர் மாவட்ட வனத் துறையினர், வெட்டப்பட்ட மரங்களின் கீழ்பாகத்தை வேருடன் பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர்.