பழனி மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதரன். இவருடைய மகனான பொறியியல் பட்டதாரி பாலாஜி சந்தானம் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் மற்றும் விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ”விருகம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் சரவண பிரகாஷ் ஆகியோர் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், மாஃபா.பாண்டியராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தை காட்டி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
அமைச்சர்கள் பலரின் அறைக்குள் அவர்கள் இருவரும் அமர்ந்திருப்பது போன்ற பல்வேறு புகைப்படங்களால் நம்பி, சார்பு ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெறச் செய்ய, தலைமைச் செயலகத்தில் உள்ள கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறை வாசலில், மூன்று லட்ச ரூபாயை கொடுத்தேன். பின் அதிகாரிகளுக்கு பார்ட்டி கொடுக்க எனக் கூறி மேலும் மூன்று லட்ச ரூபாயை வசூல் செய்தனர். இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியானதில், எனது பெயர் இடம் பெறவில்லை.
அமைச்சர்களுடன் எடுத்த ஃபோட்டோவை காட்டி ரூ.25 லட்சம் மோசடி! இதையடுத்து ஸ்ரீராம் மற்றும் சரவண பிரகாஷ் ஆகியோர், இரண்டாவது தேர்ச்சி பட்டியலில் கண்டிப்பாக வரும் எனக் கூறி, 2019 மே மாதம் வரை அலைக்கழித்தனர். மேலும் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் பணி ஆணை உடனடியாக கிடைக்கும் எனத் தெரிவித்ததால், ஃபெரோஸ்கான் என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தினேன். மேற்கொண்டு எட்டு லட்சம் தந்தால் பணி ஆணை கைக்கு வந்துவிடும் என அவர்கள் உறுதியாக தெரிவித்தனர். அந்தப் பணத்தையும் அமைச்சர்கள் தங்கும் கிரீன்வேஸ் சாலையில், எனது உறவினர்களோடு சென்று கொடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 25 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியும் அவர்கள் கூறியது போன்று வேலை கிடைக்காததால், மோசடி செய்யப்பட்டதை அறிந்த பாலாஜி சந்தானம் அதிர்ச்சி அடைந்து, இது தொடர்பாக ஸ்ரீராம் மற்றும் சரவண பிரகாஷிடம் நேரில் சென்று கேட்டபோது, அவர்கள் இவரை சந்திக்க மறுத்துள்ளனர். மேலும், ஃபோனில் தொடர்பு கொண்ட போது மிரட்டியும் உள்ளனர். அமைச்சர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலைமைச் செயலகத்திலேயே மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்களுடன் எடுத்த ஃபோட்டோவை காட்டி ரூ.25 லட்சம் மோசடி! இதையும் படிங்க: சின்னத்திரை நடிகையை ஏமாற்றியவர் மீது வழக்குப்பதிவு