தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் (36). அதிமுக பிரமுகரான இவர், கடந்த 2011 - 16ஆம் ஆண்டு வரை ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். இவருக்கு கற்பகவள்ளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, திவ்யா சுந்தரி, சுந்தரி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கற்பகவள்ளி மூன்றாவதாக கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுரேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, தனது வீட்டிலிருந்த கற்பகவள்ளியை தாக்கி மார்பு பகுதியில் சிகரெட்டால் சூடு வைத்தார். தொடர்ந்து வயிறு மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் பலமாக தாக்கினார். இதில், 6 மாத கரு கலைந்தது. இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கற்பகம் மயக்கமடைந்தார். இதையடுத்து, தாலிக்கயிறால், கற்பகத்தின் கழுத்தை நெரித்த சுரேஷ், கற்பகம் தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடி அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் கற்பகவள்ளி உயிரிழந்தார். உடற்கூராய்வு தகவலில், கற்பகவள்ளி, தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், வயிற்றில் இருந்த 6 மாத கரு சிதைந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பேரூராட்சி தலைவராக இருந்த சுரேசை கைது செய்யப்பட்டார்.