ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணை முதன்மைச் சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.
ஒசூரு, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வாணியம்பாடி, வேலூர் ஆகிய மாவட்டங்களின் அலுவலகம் இவரது கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவருகிறது.
மாதந்தோறும் மண்டல கூட்டம் காட்பாடியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த மாதத்திற்கான கூட்டம் நேற்று முன்தினம் (அக். 13) நடைபெற்றது.
இந்நிலையில், கோப்புகளைச் சரிபார்த்து அங்கீகரிக்க பன்னீர் செல்வம் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேம சித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் விஜய், ரஜினிகாந்த், விஜயலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் (அக். 13) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், லஞ்ச பண பரிமாற்றம், பேரம் பேசுவதற்காக காட்பாடியில் தனியாக அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.