சென்னை: சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவில் உள்ள குடியிருப்பில் தலில் சந்த் ஜெயின், புஷ்பா பாய் இவர்களது மகன் சீத்தல் ஜெயின் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனிப்படை காவல் துறையினர் புனே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தலில் சந்த் ஜெயினின் மகள் பிங்கி நேற்று(நவ.11) இரவு சௌகார்பேட்டை வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொலை நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சீத்தல் ஜெயின் அவரது மனைவி ஜெயமாலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெற்றோருடன் வசித்து வருகிறார். ஜெயமாலா இரு பெண் குழந்தைகளுடன் புனேவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வரும் நிலையில், ஜீவனாம்ச வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.