கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சூளை ஆண்டியப்பன் தெருவில் வசித்துவரும் உதயகுமார் என்பவர், தனக்குச் சொந்தமான காலி மனையை போலி பத்திரம் தயாரித்து அதன் மூலம் இடத்தை விற்க முயன்றதாக புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி புழல் உதவி ஆணையர் ரவி உத்தரவின் பேரில் செங்குன்றம் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், புழல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நிலமோசடி சம்பந்தமான குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ரெட்டேரி புழல் லட்சுமிபுரம் அருகில் உள்ள டாஸ்மாக் அருகே ரவுடி சந்துரு என்ற சந்திரகுமார் இருப்பதாக புழல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அங்கு இருந்த சந்துருவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், சந்துரு புழலில் போலி ஆவணம் தயாரித்து அதன் மூலம் நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதேபோல் செங்குன்றம் பகுதியில் ரோந்துக்கு சென்ற காவல் துறையினர் தனிகா என்ற பெரியபாளையம் தணிகாச்சலம் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், தனிகா தமிழ்நாடு முழுவதும் ஆறு கொலை வழக்குகளில் தேடப்பட்டுவந்த நபர் என்பதும் செங்குன்றத்தில் உணவு விடுதியில் பணம் வழிப்பறி செய்த நபர் என்பதும் கூலிப்படை தலைவனாக இருப்பதும் தெரியவந்தது. சந்துரு இவரின் கூட்டாளி ஆவார்.
கைது செய்யப்பட்ட ரவுடிகள் இவர்கள் இருவரும் நில அபகரிப்பு, மோசடி, வழிப்பறி, கொலை, கொள்ளை, போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ரவுடிகள் இருவர் சிக்கியுள்ளதால் சென்னை ஆணையர் விஸ்வநாதன், செங்குன்றம் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், புழல் ஆய்வாளர் தங்கதுரையை பாரட்டியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகளை குண்டர் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கூலிப்படையைத் சேர்ந்த மாதவரம் பிரபாகரன், காவாங்கரை வணமாமலை, மணிகண்டன், பார்த்திபன், அந்தோணிதாஸ், சூர்யா, சென்னை பிரகாஷ், சந்திரகுமார் என்ற அம்பத்தூர் சந்துரு, இன்பா, இனியா, சைலு, சுபாஷ் ஆகியோரை கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.