தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வழிப்பறி கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த சிசிடிவி! - காஞ்சிபுரம் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் இருவேறு இடங்களில் சாலையில் சென்ற நபர்களை கத்தியால் வெட்டி விட்டு செல்போன், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற நபரை சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

one arrested in kanchipuram robbery
one arrested in kanchipuram robbery

By

Published : Feb 7, 2021, 2:36 PM IST

காஞ்சிபுரம்: கத்தியால் வெட்டி விட்டு செல்போன், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இவ்வேளையில் இரு தினங்களுக்கு முன்பு மாதேஷ் செல்லப்பெருமாள் நகரில் நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடியே வந்த இருவர், மாதேஷ்யிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சிசிடிவி

மாதேஷ் பணத்தைத் தர மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் மாதேஷ்யின் தலை, கால்களில் பலமாக வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன், ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மேலும் இதேபோலவே செட்டிப்பேடு சாலை சந்திப்பிலும் நின்றுகொண்டிருந்த லாரி ஓட்டுநர் முகேஷ் (27) என்பவரையும் கத்தியால் தாக்கிவிட்டு செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த இருவேறு வழிப்பறி சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாதேஷ், முகேஷ் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடத்த இடத்தின் அருகிலிருந்த சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் அடையாளங்கள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு சம்பவத்தில் தொடர்புடைய மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (19) என்பவரை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதனையடுத்து ராகுலை காவல் நிலையம் அழைத்து வந்த காவல் துறையினர், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள், பணம், கொள்ளைக்குப் பயன்படுத்திய உயர்ரக இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சூரிய என்பவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details