தேனி மாவட்டம் கூழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - பாரிஜாதம் (50) தம்பதி. இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகனும், நித்தியா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அதே ஊரில் வசித்துவந்தனர்.
பாரிஜாதம், நாகராஜன் இருவரும் மகன் பார்த்திபன் வீட்டின் மேல்தளத்தில் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பாரிஜாதம் மகன் வீட்டில் உணவு உண்ணாமல் மகள் வீட்டில் உண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கோபமடைந்த நாகராஜன், தன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை கூழையனூரில் இருந்து குச்சனூர் செல்லும் சாலையில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான தோட்டப் பகுதியில் பாரிஜாதம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கூழையனூர் அருகே தோட்டத்தில் பெண் கொலை இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் . கொலைச் சம்பவம் நடந்தது முதல் கணவர் நாகராஜ் எங்கு சென்றார் என்பது தெரியாத காரணத்தினால் கொலையாளி அவராக இருக்குமோ என்ற கோணத்திலும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.