சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் அடையாறு சைபர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், கடந்த 9ஆம் தேதி டாட்டா கேப்பிட்டல் என்ற நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறிய பெண் ஒருவர், தனிநபர் கடன் இரண்டு லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் மூலம் வழங்குவதாகத் தெரிவித்தார். இதனை நம்பி அந்த நபரிடம் ஆதார் ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை வழங்கினேன்.
அதன்பின் வந்த ஓடிபி-யை அந்தப் பெண்ணிடம் பகிர்ந்துகொண்டேன். இதனையடுத்து தனது வங்கிக் கணக்கிலிருந்து 20ஆயிரம் ரூபாய் திடீரென மாயமானது" எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்புகொண்ட செல்போன் எண்ணை சைபர் கிரைம் மூலமாக சிக்னலை வைத்து தேடுகையில் நாமக்கல் குமாரப்பாளையத்தில் இருப்பது தெரியவந்தது. அவை போலி கால் சென்டர் எண் என்பதும் உறுதியானது.
இதனைத்தொடர்ந்து சென்னை அடையாறு தனிப்படை காவல் துறையினர் நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் சென்று போலி கால் சென்டரை சுற்றி வளைத்து, அங்கு பணிபுரிந்த பெண்கள், கும்பலின் தலைவர்கள் குமரேசன், விவேக் ஆகியோரை பிடித்தனர்.