எர்ணாகுளம்: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள அரசின் உயர் பதவி வகித்த ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனுவை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்த வழக்கு விசாரணை ஆவணங்கள், வாதங்கள் ஆகியவற்றை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் நடந்த ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. அன்று நடந்த விசாரணையில், ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் கோரிக்கையை எதிர்த்து வாதிட்ட என்ஐஏ, ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சரின் முதன்மைச் செயலராக இருந்த எம். சிவசங்கர் மூலம் முதலமைச்சர் அலுவலகத்துடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தது.
ஸ்வப்னா வங்கி லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும், 982.5 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளையும் என்ஐஏ அலுவலர்கள் கைப்பற்றினர். இவ்வேளையில் இன்று (ஆகஸ்ட் 10) நடந்த ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, அவருக்கு எதிராக என்ஐஏ அலுவலர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். மேலும், விசாரணை குறித்த ஆவணங்களையும் சமர்பித்தனர், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.