ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கல் குவாரியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த செந்தில், சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் பாறைக்கு வெடி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் செந்தில்,ஆறுமுகம் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் இது குறித்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் துறையினர் இருவரது சடலங்களையும் கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர், கோபிச்செட்டிபாளையம் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சிகரெட் குடோனில் தீ விபத்து!