ஐபிஎல் போட்டி உலகில் அதிகம் பணம் கொழிக்கும் தொடராக பார்க்கப்படுகிறது. இதனையொட்டி ரசிகர்கள் அதிகளவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களை சூதாட்ட தரகர்கள் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் பங்கேற்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயிரம் ரூபாய் முதல் கோடிகள் பந்தயம் கட்டப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்தது. நேற்று (நவ.10) நடந்த இறுதிப்போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக யானைகவுனி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மிண்ட் தெருவில் உள்ள ஒரு நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஆன்லைன் செயலி மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் மூலமாக, அவரது நண்பர்கள் மூவரையும் லாவகமாக யானைகவுனி காவல்துறையினர் பிடித்தனர். விசாரணையில் இவர்கள் சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீரஜ், சந்தீப் குமார், பங்கஜ், மயூர் ஆகியோர் என்பது தெரியவந்தது. நால்வரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த, நான்கு செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் 328.66 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!